மிக்ஜாம் புயல், மழை வெள்ளம் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 411 அரசு நிவாரண முகாம்களில் 18,729 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. இதில் சென்னை, திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் கன மழை அதிக அளவில் உள்ளது. பொது இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
இச்சூழ்நிலையில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்பதற்காக தமிழக அரசு நிவாரண முகாம்களை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 43 நிவாரண முகாம்களில் 325 குடும்பங்களைச் சேர்ந்த 2473 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், சென்னையை விட அதிக பாதிப்புக்குள்ளாந திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 148 நிவாரண முகாம்களில் 2591 குடும்பங்களைச் சேர்ந்த 7587 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர்த்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமாக மழை பெய்துள்ளது.
இந்த 7 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 411 நிவாரண முகாம்கள் மூலம் 5,556 குடும்பங்களைச் சேர்ந்த 18,729 பேர் தங்க வைக்கப்பட்டு, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் மூலம் உணவு விநியோகிக்கப்பட்டு வருவதாக பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.