பாஜக கொடியுடன் வந்த சொகுசு காரில் இருந்து 2 லட்ச ரூபாய் பணம் உட்பட தமிழ்நாடு முழுவதும் 61 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. 49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை கொண்டு செல்லும் நபர்கள், அது தொடர்பான உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தவிர்ப்பதற்காக தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திவரும் சோதனையில் லட்சக்கணக்கான ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி எல்லையில் உள்ள கெங்கராம்பாளையம் பகுதியில் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை திருச்சியில் ரூ.3.63 லட்சம், லால்குடி அருகே ரூ.57,500, தஞ்சாவூர் அடுத்த ஒரத்தநாட்டில் ரூ.5.88 லட்சம், நெய்வாசல் அருகே ரூ.59,750, கும்பகோணத்தில் ரூ.81,200 பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஸ்டேஷன் சாவடி அருகே உரிய ஆவணமின்றி காரில் கொண்டுவரப்பட்ட 11.58 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம் பொன்னை அருகே, என்.பாளையத்தில் உள்ள மாநில எல்லை சோதனை சாவடியில் ஆந்திராவிலிருந்து சோளிங்கர் நோக்கி காரில் கொண்டுவரப்பட்ட 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகைகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. பணம் பறிமுதல் செய்யப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தால் அவர்களுக்கு அந்த பணம் திரும்ப அளிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தென்னாங்கூர் கிராமத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காஞ்சிபுரம் நோக்கி பாஜக கொடியுடன் சென்ற சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் காரில் இருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகம் முழுவதும் பரபரப்பு... ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு!
பூட்டு நகரை கோட்டை விட்ட அதிமுக... கொந்தளிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!
32 தமிழக மீனவர்களை விடாமல் விரட்டி கைது செய்த இலங்கை கடற்படை... படகுகளும் பறிமுதல்!
குரூப் 2 நேர்முகத்தேர்வுக்கு தயாராக இருங்க... அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!