நிரம்பி வழியும் ஏரிகள்... கொசஸ்தலை, அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!


பூண்டி நீர்த்தேக்கம்

பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை மற்றும் அடையாறு ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது. இங்குள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கம் 3,458 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மழைநீர் மற்றும் வரத்துக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் என நீர்வரத்து தற்போது 40 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

மேலும் நீர்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில், தற்போது 34 அடியாகவும், மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2,976 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி

தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டியதால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவின் பேரில் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 45,000 கன அடி உபரி நீரானது கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியும் முழு கொள்ளளவை எட்டியது. இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், 22.8 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக உள்ளதால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழை தொடரும் பட்சத்தில் இந்த நீர் திறப்பு மேலும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x