சென்னையில் முடங்கும் போக்குவரத்து...புறநகர் ரயில்கள் முற்றிலும் ரத்து!


புறநகர் ரயில்

சென்னையில் பெய்த கனமழை மற்றும் தேங்கியிருக்கும் வெள்ளம் காரணமாக புறநகர் ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. ஆனாலும் முழுமையாக வெள்ள நீர் வடிய இன்னும் 20 நேரத்திற்கு மேலாகும் என கூறப்படுகிறது. இதனால் சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் நேற்று ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனாலும், தண்டவாளங்கள் தெரியாத அளவிற்கு பல இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தது. மிக மெதுவாக ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று புறநகர் ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீர் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்

ஏற்கெனவே சாலைகளில் அதிக அளவு நீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளும் மிகக் குறைந்த அளவில் தான் இயக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று மின்சார ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும்.

ஆனாலும் ஆறுதல் அளிக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும், ஞாயிறு அட்டவணையில் அவை இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x