தமிழகத்தில் காங்கிரஸ், விசிக போல விஜய் கட்சியும் திமுகவின் இலவச இணைப்புதான்: ஹெச்.ராஜா விமர்சனம்


பிரதமர் நரேந்திர மோ டி 74-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, `மோடி நாட்டுக்கு பாதுகா ப்பு’ `தலைக்கவசம் உயிருக்கு பாதுகா ப்பு’ என்ற வாசகத்துடன் `574’ இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கும் நிகழ்வை பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா திருவல்லிக்கேணி ஐஸ்ஹ வுஸில் நேற்று தொடங் கி வைத்தார். உடன் மாநில செயலாளர் சதீஷ்குமா ர் உள்ளிட்டோ ர். | படம் : ம.பிரபு |

சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ், விசிக போல நடிகர் விஜய் கட்சியும் திமுகவின் இலவச இணைப்புதான் என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமை ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார். பின்னர், புதிய உறுப்பினர்களுக்கு அட்டைகளை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிப்பதில் மிருக கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

ஆடிட்டர் கே.பாண்டியன் கொலை வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும். அந்த வழக்கைமாநில அரசு, வாபஸ் பெறுவதாக கூறியதால்தான், செல்வப்பெருந்தகை விடுதலையானார். தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் மர்மம் நீடிக்கிறது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சிபொதுச் செயலாளர் ஜெய்சங்கர், ராகுல்காந்திக்கு அனுப்பிய கடிதத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே இதில் கைதானகாங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் செல்வப் பெருந்தகையுடன் இருந்தவர். எனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையை கைது செய்ய வேண்டும். காங்கிரஸ் மாநில தலைவராக இருப்பதற்கு அவருக்கு தகுதி கிடையாது.

ராகுல் காந்திக்கு கண்டனம்: ராகுல்காந்தி அந்நிய மண்ணில் இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். வங்கதேசத்தில் இந்துக்கள், கோயில்கள் மீது தாக்குதலும் கொலையும் நடக்கிறது. இதற்கு காரணமானவர்களுடன் ராகுல்காந்தி அளவளாவி கொண்டிருக்கிறார். பிரதமருக்கு எதிரான ராகுல் காந்தியில் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நடிகர் விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர்வைத்திருந்தாலும், திமுக ஒத்துழைத்தால் தான் அரசியல் வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். பெரியார் சிலைக்கு விஜய் மாலை போட்டதும் இதைத்தான் காட்டுகிறது. மாநாடு நடத்த முடியாமல், பல சிக்கல்களை விஜய் சந்தித்துள்ளார். இப்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெரியார் சிலைக்கு மாலை போட்டதால்தான் விஜய் கட்சி மாநாட்டுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. திமுக அரசுக்கு மாற்றாக கொள்கையில் மாற்றம் இல்லாமல், திமுகவின் கொள்கைகளையே காப்பியடிப்பதால் விஜய்யை ஒருமாற்றாக மக்கள் கருத மாட்டார்கள். கடைசி வரை விசிக, காங்கிரஸ் போல திமுகவின் இலவச இணைப்பாகத் தான் விஜய் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

x