மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தற்கான காரணம் குறித்து, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதசேம், சத்தீஷ்கர் மாநிலங்களில் பாஜகவிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. இந்த தேர்தல் தோல்வியானது காங்கிரஸ் தலைமை வகிக்கும் இந்தியா கூட்டணி கட்சியினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தேர்தல் ரிசல்ட் தொடர்பாக கூறியதாவது:
தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தானிலும் காங்கிரஸால் வெற்றி பெற்றிருக்க முடியும்.
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்து போட்டியிட்டதால் வாக்குகள் பிரிந்துவிட்டன. இதுதான் உண்மை. தேர்தலில் உரிய பங்கீடுகளை செய்யுமாறு நாங்கள் அறிவுறுத்தியிருந்தோம். வாக்குள் சிதறியதாலேயே காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது. சித்தாந்தத்துடன், வியூகமும் தேவை. 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே உரிய தொகுதி பங்கீடு ஏற்படுமேயானால் நிச்சயமாக பாஜகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலின்போது நாங்கள் இணைந்து, தவறுகளை சரிசெய்து போட்டியிடுவோம்.இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.