சைபர் குற்றங்களில் தொடர்புடையவர்களின் வங்கி கணக்கை முடக்க வழக்கு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்


சென்னை: சைபர் குற்றங்களில் தொடர்புடைய நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு முன்பாகப் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை உருவாக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமான முறையில் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக குஜராத், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா போலீஸாரின் உத்தரவுப்படி தங்களதுவங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் இரும்பு நிறுவனத்தின் இயக்குநர் அஜித்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், சைபர் குற்றங்களில் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு முன்பாக அதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்,அதை நாடு முழுவதும் உள்ளகாவல்துறையினர் பின்பற்றமத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும், என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ‘‘தனிநபர்கள் மற்றும்தனியார் நிறுவனங்களின் வங்கிக்கணக்குளை முடக்குவதற்கு முன்பாக முறையாக நோட்டீஸ் தர வேண்டும். எதற்காக கணக்கை முடக்கப் போகிறோம், எந்த வழக்குக்காக முடக்கப் போகிறோம் என முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் அதன்பிறகே முடக்கவேண்டும் என விதிமுறைகளை வகுக்க வேண்டும்’’ என்று வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், குஜராத், கேரளா, கர்நாடக, மஹாராஷ்டிராபோலீஸார் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்

x