சென்னை: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ,மாணவியர்களுக்கான உதவித் தொகையை 2 மடங்காக உயர்த்திரூ.14.90 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில், தற்போது ஆராய்ச்சி படிப்புக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலன்களை மேம்படுத்த தனி துறையை கடந்த 2010 மார்ச் 27-ம் தேதி மறைந்த முதல்வர் கருணாநிதி ஏற்படுத்தினார். அதன்மூலம் பல்வேறு சிறப்புத் திட்டங்களை உருவாக்கி எண்ணற்ற சலுகைகளை வழங்கினார். தொடர்ந்துஅதே வழியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை, உதவித் தொகை ரூ.1,000 என்பதை ரூ.1,500 ஆக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தினார்.
அத்துடன் தற்போது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையையும் உயர்த்தியுள்ளார்.
அதன்படி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்விஉதவித் தொகை ஆண்டுக்குரூ.1,000 என்பது இருமடங்காகரூ. 2,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாற்றுத் திறன் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.3,000 என்பது ரூ.6,000-ஆகவும்,9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.4,000 என்பதை ரூ.8,000 ஆகவும் இருமடங்காக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.6,000 உதவித்தொகை ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்கவும்உத்தரவிட்டு்ள்ளார். மேலும், தொழிற்கல்லூரிகளிலும், பட்டமேற்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கான ஆண்டு கல்வி உதவித்தொகை ரூ.7,000-த்தில் இருந்து ரூ.14,000-ஆக உயர்த்தியுள்ளார்.
இவ்வாறாக மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி ஊக்கத் தொகையை 2 மடங்காக உயர்த்தி அதற்காக ரூ.14 கோடியே90 லட்சத்து 52,000 அனுமதித்து உத்தரவிட்டார். இதற்கான அரசாணை கடந்தாண்டு பிறப்பிக்கப்பட்டது.
ரூ.50 லட்சம் ஒதுக்கீடு: இந்நிலையில் சமீபத்தில் பள்ளி, கல்லூரி படிப்புகளுடன், மாற்றுத் திறனாளி மாணவ- மாணவியர்கள் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளிலும் ஈடுபடவேண்டும் என்ற விருப்பத்துடன் ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு ஊக்கமளிப்பதற்காக அவர்களுக்கு முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின்கீழ் தலா ரூ.1 லட்சம் வீதம் 50 மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.50 லட்சத்தையும் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுகளால், தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியரின் வாழ்க்கை சிறக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது