அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல ஜி ஸ்கொயர் உள்பட பல்வேறு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் முன்னதாக வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 4 கார்களில் வந்த 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி இருந்தனர். இந்த நிலையில், விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஏற்கெனவே 2021-ல் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரிஸ் சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையை நடத்தி வருகின்றனர்.
மேலும் சென்னையில் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை, அடையாறு, அமைந்தகரை, அண்ணா நகர், உள்ளிட்ட 20-க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல தரமணியில் உள்ள ஐ.டி நிறுவனம் உட்பட 10 - க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேல்ஸ் பல்கலைக்கழக அலுவலகத்தில் சென்னை நந்தனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.