உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக 5 பேர் நியமனம்


சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்துவரும் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக எல்.சி. விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர் கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 5 பேர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சக நீதிபதிகளான ஜெ.சஞ்ஜிவ் கண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு கடந்த செப்.10-ம் தேதி பரிந்துரை செய்தது.

அதை ஏற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் எல்.சி. விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.இதில் எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணிபுரிந்தவர்கள். ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோர் மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி அதன்பிறகு உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள்.

தற்போது நீதிபதிகள் எல்.சி. விக்டோரியா கவுரி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியஇருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும், மற்ற 3 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றி வருகின்றனர். விரைவில் இவர்கள் 5 பேருக்கும் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நிரந்தர நீதிபதிகளாக பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சமீம் அகமதுவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்தும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்

x