லட்டு கலப்பட சர்ச்சை: திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்: திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என்றும், அதில் பன்றிக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது 4 ஆய்வக பரிசோதனைகளிலும் உறுதியாகி இருப்பதாகவும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி பெருமாள் கோயிலை நிர்வகிக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியமலா ராவ், “திருப்பதி பெருமாள் கோயிலுக்கு நெய் சப்ளை செய்பவர்கள் தரமான நெய்யை சப்ளை செய்கிறார்களா என்பதை பரிசோதிக்க கோயிலுக்குச் சொந்தமாக ஆய்வக வசதி இல்லை. வெளியே ஆய்வு செய்யலாம் என்றால், ஆய்வகக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. நெய் சப்ளை செய்பவர்கள் இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான நான்கு அறிக்கைகளும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தந்தன. எனவே, நாங்கள் உடனடியாக விநியோகத்தை நிறுத்தினோம். மேலும், ஒப்பந்தக்காரரை பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளோம். அபராதம் விதிக்கும் நடைமுறையும் தொடங்கப்படும். அதோடு, சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
லட்டு கலப்பட சர்ச்சை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் சத்யம் சிங் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், “திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் கோயில் பிரசாதம் தொடர்பான தகவல்கள், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. திருப்பதி கோயில் பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கண்டறிப்பட்டிருப்பது அரசியலமைப்பின் 25-வது பிரிவின்படி குற்றம். இது மத உரிமை மற்றும் பழக்கவழக்கங்களுக்கு எதிரானது.
மத நடைமுறைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் இதை வலியுறுத்தியுள்ளன. திருப்பதி பிரசாத விவகாரம், கோயில் நிர்வாகத்தில் உள்ள மிகப் பெரிய அமைப்பு சிக்கல்களின் அறிகுறி. அர்ப்பணிப்பு மற்றும் கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கக் கூடியதாக கோயில் நிர்வாகங்கள் இருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது. இதை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
லட்டு சர்ச்சை: மத்திய அமைச்சர் ரியாக்ஷன்: சர்வதேச உணவு ஒழுங்குமுறை உச்சி மாநாடு புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட மத்திய உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி, திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து கூறும்போது, “ஆந்திரப் பிரதேச முதல்வர் கூறியது மிகவும் கவலைக்குரியது. இது தொடர்பாக விரிவான விசாரணை தேவை. அதோடு, குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சந்திரபாபுவுக்கு ஜெகன் மோகன் பதிலடி: திருப்பதி லட்டு சர்ச்சையில் கருத்து தெரிவித்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, “திருப்பதி பெருமாள் கோயில் லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக வெளியாகி உள்ள அறிக்கை தவறானது. முதல்வர் சந்திரபாபு நாயுடு, மக்களின் நம்பிக்கையை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்” என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உயர்வு: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
சுட்டெரிக்கும் வெயில்: தினசரி மின் தேவை 30% அதிகரிப்பு: தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வழக்கத்துக்கு மாறாக வெயில் சுட்டெரித்து வருவதால், தினசரி மின் தேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வன்முறையைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு நக்சல்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். எனது இந்த வேண்டுகோளுக்கு நக்சல்கள் செவிசாய்க்கவில்லை என்றால், விரைவில் அவர்களுக்கு எதிராக முழு நடவடிக்கை எடுப்போம். நக்சல்களை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடங்குவோம். அது வெற்றியடைவதை உறுதி செய்வோம்” என தெரிவித்தார்.
“இஸ்ரேல் செய்தது போர்க் குற்றம்” - ஹிஸ்புல்லா தலைவர்: அனைத்து நெறிகள், சட்டங்களுக்கு அப்பால் சென்று இஸ்ரேல் போர்க் குற்றம் செய்துள்ளது என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார். லெபனானில் பேஜர், வாக்கி-டாக்கிகளை வெடித்தவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு அவர் எதிர்வினையாற்றியுள்ளார்.
இந்தப் பேட்டிக்கு பின்னர், தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் ராக்கெட் லாஞ்சர் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான ராக்கெட் லாஞ்சர் பேரல்களை அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
வரலாற்று உச்சம் தொட்ட இந்தியப் பங்குச் சந்தை! - அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்பு எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளில் புதிய எழுச்சி ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடையும்போது, சென்செக்ஸ் 1,359 புள்ளிகள் உயர்ந்து 84,544 என்ற புதிய வரலாற்று உச்சம் கொண்டிருந்தது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 375 புள்ளிகள் உயர்ந்து 25,790 என்ற உச்சத்தை எட்டியிருந்தது.
அக்.27-ல் தவெக முதல் மாநாடு: விஜய் அறிவிப்பு: விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது.
நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக் கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27-ம் தேதி, மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.