கலங்கரை விளக்க தினம்: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் நாளை கட்டணமின்றி பார்வையிட அனுமதி! 


கன்னியாகுமரி கலங்கரை விளக்கம்.

நாகர்கோவில்: கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு நாளை கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் கோவளம் சாலையில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இந்த கலங்கரை விளக்கம் தரை மட்டத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திலும், கடல் மட்டத்திலிருந்து 180 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. கடற்கரைப் பகுதியில் இருந்து 30 மீட்டர் தொலைவுக்கு நன்றாக வெளிச்சம் தெரியும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மேல் பகுதிக்கு ஏறிச்செல்வதற்கு வசதியாக மொத்தம் 139 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், பாதுகாப்பு இல்லாததால் 2008-ம் ஆண்டு வரை சுற்றுலாப் பயணிகள் கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்குச் சென்று பார்க்க அனுமதிக்கபடவில்லை. 2008-ம் ஆண்டுக்கு பிறகே சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்குச் சென்று பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

கலங்கரை விளக்கத்தை தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு, உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.10-ம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.25-ம் சிறுவர்களுக்கு ரூ 5-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடலில் செல்லும் கப்பல்கள் மற்றும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 2012-ம் ஆண்டு கலங்கரை விளக்கத்தில் ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் நவீன ரேடார் கருவி பொருத்தப்பட்டது. மேலும், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறிச் சென்று பார்ப்பதற்கு வசதியாக லிஃப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கலங்கரை விளக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரியில் உள்ள கலங்கரை விளக்கத்தில் 97-வது இந்திய கலங்கரை விளக்க தினம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேசியகொடி மற்றும் கலங்கரை விளக்க துறையின் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.

கலங்கரை விளக்க தினத்தையொட்டி கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் நாளை ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி கலங்கரை விளக்க அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

x