சிவகங்கை | அடையாளத்தை தொலைத்த 200 ஆண்டுகள் பழமையான கிராமம்: விடிவுக்காக காத்திருக்கும் 150 குடும்பங்கள்


கண்டனிப்பட்டி கிராமம். (உள்படம் ) ராஜா

சிவகங்கை: சிவகங்கை அருகே வருவாய்த் துறை ஆவணத்தில் 200 ஆண்டுகள் பழமையான கிராமத்தை கண்மாய் என குறிப்பிட்டதால், எந்தவித நில ஆவணமின்றி 150 குடும்பங்கள் தவித்து வருகின்றன.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வட்டம் கொல்லங்குடி ஊராட்சியைச் சேர்ந்தது கண்டனிப்பட்டி கிராமம். 200 ஆண்டுகள் பழமையான இக்கிராமத்தில் 150 குடும்பங்கள் உள்ளன. மொத்தம் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, குடிநீர் ஊருணி, குளியல் ஊருணி மற்றும் கருப்பணசாமி, விநாயகர், அம்மன் கோயில் உட்பட 6 பழமையான கோயில்கள் உள்ளன. 3 கண்மாய்கள் மூலம் 200 ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் உள்ளன. இதுதவிர 100 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலங்கள் உள்ளன.

இந்நிலையில் 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை யுடிஆர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் நத்தம் நிலத்தை தவிர மற்ற நிலங்கள் கணினிமயமாக்கப்பட்டன. குடியிருப்புகள், விளைநிலங்களை வகைப்படுத்தாமல், அனைத்து பகுதிகளையும் கண்மாய் என குறிப்பிட்டனர்.

இதனால் குடியிருப்பு பகுதிகள், நன்செய், புன்செய் நிலங்களுக்கு பட்டா இல்லை. மேலும் பத்திரப்பதிவு செய்ய முடிய வில்லை. இதனால் தங்களது தேவைக்கு நிலங்களை விற்க முடியாமலும், அடமானம் வைத்து வங்கி கடன் பெற முடியாமலும் 40 ஆண்டுகளாக கிராம மக்கள் தவித்து வரு கின்றனர்.

இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த ராஜா கூறியதாவது: யூடிஆர் கணக் கெடுப்பின்போது அதிகாரிகள் செய்த தவறால் எங்கள் பகுதி முழுவதும் வருவாய்த் துறை ஆவணத்தில் கண்மாய் என உள்ளது. எங்களிடம் சொத்து இருந்தும் பயனில்லாத நிலை உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான எங்கள் கிராமத்தின் அடையாளத்தை தொலைத்துவிட்டு நிற்கி றோம்.

நிலத்தை வகைப்படுத்தி பட்டா வழங்க 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம் என்றார். இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நீர்நிலை என வகைப்படுத்தியுள்ளதால், அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். 2012-ம் ஆண்டே இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்து விட்டோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை’ என்றனர்.

x