தன்னுணர்வுடன் வாழ இளையோருக்கு ஆரோவில்லில் பயிற்சி: மகிழ்ச்சி பிக்னிக்காக தொடர்ந்து நடத்த திட்டம்! 


புதுச்சேரி: தன் உணர்வுடன் வாழ இளையோருக்கு புதுச்சேரி ஆரோவில்லில் பயிற்சி தரப்பட்டது. தொடர்ந்து பயிற்சி தர கோரியுள்ளதால், மகிழ்ச்சியான தன்னுணர்வு பிக்னிக்காக தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர்.

புதுச்சேரி ஆரோவில் பாரத் நிவாஸில் நடந்த இளையோர் தன்னுணர்வுடன் வாழ்வதற்கான ஒரு நாள் பயிற்சி இன்று நிறைவுற்றது. இதில், தன்னுணர்வுடன் வாழும் கலை என்ற முறையைப் பற்றிய பயிற்சிகளை, ஸ்ரீ கௌரவ் சோலங்கி வழிகாட்டலில் பங்கேற்பாளர்கள் கற்றனர்.

ஆரோவில் அறக்கட்டளை உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வை, ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் குழுவினர், ஆரோவில்லில் வசிப்போர், ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் நடத்தினர். இதில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள், புதுச்சேரியில் வசிக்கும் இளையோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

பயிற்சியை நிறைவு செய்தோர் கூறுகையில், "இந்தப் பயிற்சியில், தன்னுணர்வுடன் வாழ்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். உடல், மனம், உணர்வுகளை விழிப்புணர்வுடன் கையாளும் தன்மையை கற்றோம். முக்கியமாக, 'அவசரமில்லாமல் உணவருந்துதல்' பயிற்சியாகவே இருந்தது. சாப்பிடும் போது மொபைல் போன்களோ அல்லது டிவியோ இல்லாமல் மவுனமாக உணவருந்தியது ஒரு புதிய அனுபவமாக பலருக்கும் அமைந்தது.

பங்கேற்பாளர்கள் ஒரு வட்டமாக அமர்ந்து, உணவின் சுவையையும், முழுமையையும் தன்னுடன் ஒவ்வொரு முறை உணவின் உணர்வுகளைக் கவனித்தபோது, இந்த செயல்முறை ஆழமான அனுபவத்தை ஏற்படுத்தியதை உணர்ந்தோம்" என்றனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் கூறுகையில், ''மாலையில் உடலை தூய்மைப்படுத்தி, அரவிந்தர், அன்னை உபதேசங்கள் கேட்டு, பேசிய பிறகு அமைதியாக உறங்கச் சென்றோம். காலையில் மாத்ரி மந்திரில் நடைபயிற்சி, ஆசனங்கள், உடல் நலப் பயிற்சிகளைக் கற்றோம். இயற்கையான பொருட்களை குளியலுக்கு பயன்படுத்தக் கற்றோம். அதன்படி கடலைமாவு, தேங்காய் எண்ணெய், மஞ்சள், எலுமிச்சை, தயிர், தேன் பயன்படுத்தி குளித்த அனுபவம் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம்'' என்றனர்.

ஆரோவில் அறக்கட்டளை தரப்பில் கூறுகையில், ''இப்பயிற்சியை இளையோருக்கு தொடர்ந்து நடத்த வேண்டும் என பலர் கோரினர். எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சி கூட்டம் நடத்தப்படும். மகிழ்ச்சியான தன்னுணர்வு பிக்னிக் என்ற பெயரில் இதைத் தொடர்ந்து நடத்த முடிவு எடுத்துள்ளோம்" என்றனர்.

x