அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகர் வேட்பாளராக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜகவும் அதிமுகவும் போட்டிபோட்டு முயன்று வந்தன. தேமுதிகவும் இரண்டு பக்கமும் பேச்சு நடத்தி தங்களுக்கான டிமாண்டை அதிகப்படுத்தி வந்தது. ஒரு வழியாக அதிமுக உடனான பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதைடுத்து ஏழு தொகுதிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியது. ஆனால், இறுதி முடிவாக தேமுதிகவுக்கு 5 தொகுதியை அதிமுக வழங்கி உள்ளது.
தேமுதிகவுக்கான தொகுதிகள் குறித்து இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றாலும் மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட தொகுதிகள் தேமுதிகவுக்கு வழங்கப்படலாம் என்கிறார்கள். இதில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுவது உறுதி என்கிறார்கள். கடந்த மாத இறுதியில் அங்கு நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதி தேமுதிகவுக்கு சாதகமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை இங்கு தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அழகர்சாமி அதிமுக - பாஜக கூட்டணியில் 3,16,329 வாக்குகளைப் பெற்றார். அதனால் விஜய பிரபாகரன் இங்கு போட்டியிடுவது பாதுகாப்பானதாக இருக்கும் என்று கட்சியினர் நம்புகிறார்கள்.
அதேபோல கள்ளக்குறிச்சி தொகுதியில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவது உறுதி எனக் கூறப்படுகிறது. அந்தத் தொகுதியிலும் தேமுதிக வலுவாக உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 11 லட்சத்து 98 ஆயிரத்து 64 வாக்குகள் கள்ளக்குறிச்சியில் பதிவானது.
இதில் திமுக வேட்பாளர் கௌதம சிகாமணி 7 லட்சத்து 18 ஆயிரத்து 306 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் 3,20,420 வாக்குகள் பெற்றார். அதனால் இந்த தொகுதியில் தங்களுக்கென தனிப்பட்ட வாக்கு வங்கி உள்ளதாக தேமுதிக தலைமை நம்புகிறது. எனவே அங்கு எல்.கே. சுதீஷ் போட்டியிடுவது உறுதி என்கிறார்கள். இந்த இருவரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.