அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு... தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைத்து பிற கட்சிகள் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் சற்று நேரத்தில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதேபோல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து வெளியிட்டார்.

அதிமுக தலைமை அலுவலகம்

முதல் கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேபோல் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடமும், எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”மக்களவைத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம். அதிமுக செல்வாக்கு கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயம் அமோக வெற்றி பெறும். மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. 2014 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக. கூட்டணிக்காக யாரையும் கட்டாயப்படுத்த முடியாது” என்றார்.

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தென் சென்னையில் ஜெயவர்தன், வடசென்னையில் ராயபுரம் மனோகரன், கிருஷ்ணகிரியில் ஜெயபிரகாஷ், ஈரோடு ஆற்றல் அசோக்குமார், தேனியில் வி.டி.நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் சந்திரஹாசனும், மதுரையில் சரவணனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் காஞ்சிபுரத்தில் ராஜசேகர், அரக்கோணத்தில் எ.எல்.விஜயன், ஆரணியில் கஜேந்திரன், விழுப்புரத்தில் பாக்யராஜ், சேலத்தில் விக்னேஷ், நாமக்கல்லில் தமிழ்மணி, கரூரில் கே.ஆர்.எல் தங்கவேல், நாகப்பட்டினத்தில் சுர்ஜித் சங்கர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

x