திருவள்ளூர்: காக்களூர் ஆவின் பால்பண்ணையிலிருந்து, வாகனங்களில் ஏற்றி அனுப்பப்படும் பால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அனுப்பப்படுவதாக ஆவின் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான ஆவின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முன் தினம் இரவு திருவள்ளூர் -ஆயில் மில் பகுதியில், காக்களூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து, பால் ஏற்றி வந்த 3 வாகனங்களை சோதனை செய்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட பாலின் அளவைவிட கூடுதலாக அந்த வாகனங்களில் பாலை ஏற்றி சென்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த வாகனங்களை மீண்டும் ஆவின் பால் பண்ணைக்கு கொண்டு சென்று ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், தலா 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட 135 டப்பில் 1,620 லிட்டர் பால் மற்றும் 7 டப்புகளில் தயிர் என, ரூ.1 லட்சம் மதிப்பிலான பால் பொருட்கள் கூடுதலாக இருந்தது தெரிந்தது.
இதுதொடர்பாக காக்களூர் ஆவின் பால் பண்ணையில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று தீவிர ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர்.
அதனடிப்படையில், மொத்த விற்பனையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பால் மற்றும் தயிர் வாகனங்களில் ஏற்றப்படுகிறதா? என்பதை முறையாக ஆய்வு செய்யாதது உள்ளிட்ட காரணங்களுக்காக காக்களூர் ஆவின் பால் பண்ணையின் துணை மேலாளர் கனிஷா, விநியோக பொறுப்பாளர் முரளி, செயல் அலுவலர் ராஜா ஆகிய 3 பேரை, காக்களூர் ஆவின் பால் பண்ணை பொதுமேலாளர் ரமேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அவர் இச்சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.