தமிழகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்... வேட்பாளர்களுக்கு என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?


இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில் முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

தேர்தல் ஆணையம்

தமிழகம் முழுவதும் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஆகியவற்றிற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மார்ச் 27-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அதற்குரிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர் அவருடன் வருவோர் என 3 வாகனங்களுக்கு மட்டுமே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிா்ணயிக்கப்பட்டுள்ள 100 மீட்டர் எல்லைக்குள் அனுமதிக்கப்படும். இதேபோல, வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே உடனிருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வேட்பு மனு தாக்கல் செய்தபிறகு, இதேபோல 100 மீட்டர் வரை நடந்து சென்று பின்னர் காரில் செல்ல வேண்டும். மேலும், வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் 360 டிகிரியில் சுழலக் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கலுக்கான கட்டணம் ரூ.25,000. தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த வேட்பாளர்களுக்கு வேட்புமனு தாக்கலுக்கான கட்டணம் 12,500 ரூபாய். காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை அளிக்கலாம். வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27ம் தேதி. மார்ச் 28ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது. மார்ச் 30ம் தேதி வரை வேட்பு மனுவை திரும்ப பெறலாம். ஏப்ரல் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஜூன் 4 ல் ஓட்டு எண்ணிக்கை நடந்து, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

x