சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டியின் தலைவராக உள்ள நடிகை ரோகிணி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அதில், செப்.7-ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில்டாக்டர் காந்தராஜ் அளித்த பேட்டியில் அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளர்கள் என்று பேசியுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘தனியார் தொலைக் காட்சிக்கு திரைப்பட நடிகைகள் குறித்து நான் கொடுத்த பேட்டி பல நடிகையர் மனதைப் புண்படுத்தி இருக்கிறது என்பதை அறிகிறேன்.
யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் இந்தப் பேட்டி கொடுத்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.