சவுக்கு சங்கரை கோவையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற உத்தரவு: குண்டர் சட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு


கோப்புப்படம்

சென்னை: சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழலுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், குண்டர் தடுப்பு சட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பெண் காவலர்களையும், பெண் காவல்துறை அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, தனது மகனை விடுவிக்கக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, எதிர்காலத்தில் சவுக்கு சங்கர் எப்படி நடந்து கொள்வார், என்னவெல்லாம் செய்ய மாட்டார் என்பது குறித்து உத்தரவாதம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, இந்த வழக்கு நேற்று காலை மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், சவுக்கு சங்கரின் செயல்பாடுகளால் எந்தவொரு இடத்திலும் சட்டம் - ஒழுங்கோ, பொது அமைதியோ சீர்குலையவில்லை. பொது சொத்துகளுக்கும் சேதம் ஏற்படவில்லை. அவர் மீது உள்நோக்கத்துடன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரானதலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘அனைத்து நடைமுறைகளையும் சரியாக பின்பற்றியே அவர் மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதனிடையே, இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரர்களாக இணைக்கக் கோரி பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர், தமிழர் முன்னேற்றப்படை தலைவரான வீரலட்சுமி சார்பில் வழக்கறிஞர் ஆஜராகினர்.

இதைத் தொடர்ந்து, இந்தவழக்கு நேற்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்தனர். சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவு உரிய நடைமுறைகளை பின்பற்றி போடவில்லை என்பதால் அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்கிறேன் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.

நீதிபதி பி.பி.பாலாஜி தனது தீர்ப்பில், ‘‘இந்த ஆட்கொணர்வு வழக்கில் முதலில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும். அதன்பிறகுதான் மற்றதைப்பற்றி யோசிக்க முடியும்’’ என்றார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பளித்ததால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதியான ஆர்.மகாதேவனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு மாற்றவேண்டும் என நீதிபதிகள் ஒருமித்த கருத்துடன் உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது தொடர்பாக அவரது தாயார் அளித்த புகார் தொடர்பாக நான்கு மாதங்களில் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

அதிகாரம் படைத்தவர்களால் நீதிபதிக்கு அழுத்தமா? - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில், ‘‘சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவில் போதைப்பொருள் வழக்கை குறிப்பிடவில்லை. குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்தாலும் மற்ற வழக்குகளில் சிறையில் இருப்பதால் அவரால் வெளியே வர முடியாது. அதீத அதிகாரம் படைத்த சிலர், இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்றும், அரசுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் என்னிடம் பேசினர். அதனால் தான் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க நேரிட்டது’’ என்றார்.

x