மைக் கிடைக்கும் இடமெல்லாம், “திமுக ஒரு ஊழல் கட்சி” என்று பிரச்சாரம் செய்வதை பிரதானமாக வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையும் ஊழல் பட்டியல் எல்லாம் வெளியிட்டு திமுகவை ஊழல் கட்சியாக சித்தரிக்கும் வேலையை செவ்வனே செய்துவருகிறார். இந்த நிலையில், அண்மையில் வெளியாகி இருக்கும் சிஏஜி அறிக்கையானது, ”பார்த்தீரா... பாஜகவினரின் யோக்யதையை? என திமுகவினரை பதிலுக்குப் பரிகாசம் செய்ய வைத்திருக்கிறது!
திருவாரூரில் நடைபெற்ற திருமண விழாவில் சிஏஜி அறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ’’சிஏஜி என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓர் அமைப்பு. மத்திய பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி, முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி, லஞ்சம் லாவண்யம் பெருத்துப்போன ஆட்சியென்று சிஏஜி-யின் அறிக்கை கூறுகிறது. இதன்மூலம் பாஜகவின் 7 விதமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாலம் கட்டுமானத் திட்டம், சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தி மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், எச்ஏஎல் விமான வடிவமைப்புத் திட்டம்- இந்த 7 திட்டங்களிலும் பல கோடி ரூபாய், ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 99999 99999 என்ற போலி செல்போன் எண்ணில் 7.5 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு பச்சையாக ஒரு மோசடியை செய்துள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சைபெற்ற நோயாளிகள் 88,760 பேர் இறந்துவிட்டனர். ஆனால், அவர்கள் இறந்தபிறகும் சிகிச்சையளிக்கப்பட்டதாக கூறி, 2 லட்சத்து 923 காப்பீட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு காப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளனர்" என்று பாஜக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இதில், சுங்கச்சாவடி ஊழல் குறித்து சிபிஎம் எம்பி-யான சு.வெங்கடேசன் இன்னும் விளக்கமாகவே விவரித்திருக்கிறார். ’2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2020 ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் சுங்கச்சாவடி வழியே 1.17 கோடி வாகனங்கள் சென்றுள்ளது. இதில் 62.37 லட்சம் வாகனங்கள் அதாவது 53.27 சதவீதம் விஐபி வாகனங்கள் என்பதால் அதற்கான சுங்கம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல அரசின் பொது நிதியில் அமைக்கப்பட்டுள்ள ஆத்தூர், கப்பலூர் சுங்கச்சாவடிகளிலும் அதிக வாகனங்கள் விஐபி வாகனங்களாக கணக்கில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாத வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 12 சதவீதம் மட்டுமே. இப்படி நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் பண வசூலில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளது. இதனை வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடத்தவேண்டும்’ என்று வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அடுத்ததாக, பாரத்மாலா திட்டத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு கிமீ தொலைவுக்கு சாலை அமைக்க ரூ18.2 கோடியாக இருந்த செலவு திடீரென ரூ 257 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதை சிஏஜி விளக்கியுள்ளது. இதுபற்றி டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், ”கடந்த 75 ஆண்டுகளில் நடந்த அனைத்து ஊழல் சாதனைகளையும் மோடி அரசு முறியடித்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை நடந்த அரசுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் மிகவும் ஊழல் நிறைந்தது. பாரத்மாலா திட்டத்தின் கீழ், ஒரு கிலோ மீட்டருக்கு 15 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 75,000 கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,மோடி அரசு ஒரு கிலோ மீட்டருக்கு 257 கோடி ரூபாயாக செலவை உயர்த்தியதன் மூலம் பாரத்மாலா திட்டத்தில் பல லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது. பாரத்மாலா திட்டத்தின் கீழ் சாலை கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவதில் கவுதம் அதானி உள்ளிட்ட பாஜகவுக்கு பக்கபலமாக உள்ள பெரும் தொழிலதிபர்கள் கொள்ளை லாபம் அடைந்துள்ளனர்” என்று சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இதெல்லாம் ஒருபக்கம் என்றால், பாஜக மிகவும் கொண்டாடும் ராமர் கோயிலை மையமாக வைத்தும் ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உபியில் ராமாயண நிகழ்வுகள் தொடர்புடைய இடங்களை ஒருங்கிணைத்து சுற்றுலா வளர்ச்சிக்காக அயோத்தி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ராமாயண கதை காட்சிகள், பூங்கா, சரயு நதிக்கரையில் ராமாயணம் தொடர்பான படித்துறைகள், லட்சுமணன் பாதை மேம்பாடு, அயோத்யா சாலை விரிவாக்கம், துளசிதாஸ் தோட்டம் விரிவாக்கம் என பல பணிகள் இத்திட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ளன.
இத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான சிஏஜி அறிக்கையில், 6 மாநிலங்களில் 6 பல்வேறு திட்டங்களின் கீழ் ஒப்பந்ததாரர்கள் ரூ.19.73 கோடி அளவில் முறைகேடாக ஆதாயம் அடைந்துள்ளனர். மேலும், ஒவ்வொரு ஒப்பந்ததாரருக்கும் கொடுக்கப்பட்ட பணியின் தொகையில் சட்டபூர்வமான உத்தரவாதத்தை விட குறைந்த அளவுதான் கொடுத்திருக்கின்றனர். ஒரு ஒப்பந்ததாரருக்கு முறைகேடாக ரூ19.57 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. குப்தர்காட் மேம்பாட்டு பணியில் கிளாம்ப் சரிசெய்தல் உட்பட அடிப்படை பணியைக்கூட செய்யாமல் பணம் பெறப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுகள் சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதுபோல, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் விமான இயந்திரம் வடிவமைக்கும் திட்டத்தில் ரூ.159 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஊரக வளர்ச்சித் துறையின் ஓய்வூதிய திட்ட நிதியை மத்திய அரசு தனது விளம்பரத்துக்கு முறைகேடாக பயன்படுத்தி உள்ளதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் மேற்கோள்காட்டி, பாஜகவின் இந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியே ஊழல் நிறைந்ததுதான் என்று நீண்ட ஊழல் பட்டியலை எதிர்க்கட்சிகள் வாசிக்கின்றன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதே இவ்வளவு என்றால் அதைக்காட்டிலும் அதிகமான ஊழல்களை பாஜக செய்திருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் பாய்கின்றன. அதற்கான காரணிகளையும் ஒவ்வொன்றாக அவர்கள் பட்டியலிடுகின்றனர்.
தற்போதும் பேசுபொருளாக இருக்கும் நீட் தேர்வு விஷயத்திலும் மத்திய பாஜக அரசு 3,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்திருக்கிறது என்று சொல்லும் எதிர்க்கட்சியினர், தகுந்த மதிப்பெண்கள் இல்லாத சுமார் 3,000 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடமளிக்கப்பட்டு அவர்களிடமிருந்து லஞ்சம் பெறப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அப்போதிலிருந்தே எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பிவருகின்றன.
ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு 69,381 கோடி ரூபாயை தனியார் டெலிகாம் நிறுவனங்களிடம் வாங்கத் தவறியுள்ளதாக முன்பு சிஏஜி குற்றம் சாட்டியிருந்தது. அதன் மூலம் அந்த நிறுவனங்களிடமிருந்து பாஜக அரசு ஆதாயம் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
அஜித் தோவலின் மகன் விவேக் மூலமாக மிகப்பெரும் நிதிமோசடி நடைபெற்றிருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்ட 13 நாட்களுக்குப் பிறகு, 2016 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி அவர் தொடங்கிய ஒரு நிதி நிறுவனத்தில் 2017-18 ம் ஆண்டு மட்டும் கேய்மேன் தீவுகளில் இருந்து அன்னிய நேரடி மூலதனமாக 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவுக்கு நிதி குவிந்தது. இது 2000 முதல் 2017 ம் ஆண்டு வரையில் இந்தியாவுக்கு வந்த மொத்த நேரடி அன்னிய மூலதனத்துக்கு நிகரானது.
அடுத்ததாக சொல்லப்படும் ஊழலும் பணமதிப்பு நீக்கத்தைத் தொடர்ந்து நடந்ததுதான். குஜராத் மாநிலம் அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் 5 நாட்களில் 745 கோடி அளவுக்கு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் டெப்பாசிட் ஆகின. முன்பு இந்த வங்கியின் இயக்குநராக இருந்தவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அடுத்த 5 நாட்களில் கூட்டுறவு வங்கிகள் பழைய நோட்டுகளை வாங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கியில் மாற்றப்பட்ட 745 கோடி ரூபாய் பணம் அமித் ஷா வகையறாவுடையது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இதுமட்டுமில்லாமல் ஓஎன்ஜிசி-யில் 80 கோடி ஊழல், தேசிய வீட்டு வசதி திட்டத்தில் 1,078 கோடி ஊழல், பிஎம் கேர் நிதியில் பல நூறுகோடிக்கு ஊழல் என்று இந்த ஒன்பதாண்டு காலத்தில் ஊழலில் பாஜக அரசு திளைத்துவந்துள்ளது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
பாஜக மீதான இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம். ”சிஏஜி அறிக்கையில், நெடுஞ்சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்துள்ளன என்றுதான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, ஊழல், முறைகேடு, மோசடி அல்லது நமது முதல்வர் சொன்ன துவாரகா விரைவு சாலை குறிப்பிட்ட நபர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடு என்பது போன்ற வார்த்தைகள் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை.
துவாரகா விரைவு சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்ததற்கு, வடிவமைப்புத் திட்டங்களில் ஏற்பட்ட மாறுதல்தான் காரணம் என்று சிஏஜி அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோல ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக, போகிற போக்கில் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஒரு அலைபேசி எண் அறிவிக்கப்பட்டது. அதில்தான் மக்கள் அழைப்பார்கள். செல்போன் இல்லாதவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மத்திய அரசு செய்ததை இவர்கள் கொலைக்குற்றம்போல மாற்றி பேசுகிறார்கள்.
சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எதிலுமே ஊழல் நடந்ததாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், அதை இவர்கள் சரியாக படிக்காமல் விவரம் தெரிந்துகொள்ளாமல் பொய்யான குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்கள். இதெல்லாம் அவர்களையே திருப்பித் தாக்கப்போகின்றன. இதன் விளைவு தெரியாமல் பேசுகிறார்கள்.
பாஜக அரசில் ஊழல் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கத்தான் செய்கின்றன. ஆனால், எதற்குமே அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் அதையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த அரசில் எந்த திட்டத்திலும், எந்த ஒரு இடத்திலும் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஊழலற்ற, மக்களுக்கான, நேர்மையான ஆட்சி நடத்தும் மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்துவதை, எக்காலத்திலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் இப்படி பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்வதை விட்டுவிட்டு மாநிலத்தின் கடனை குறைக்கும் வேலையைப் பாருங்கள். முடிந்தால் ஊழல் இல்லாத அரசாங்கத்தை நடத்தப் பாருங்கள். இல்லையென்றால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு புறக்கணிக்கப்படுவீர்கள்” என்றார் எஸ்.ஆர்.சேகர்.
2ஜி அலைக்கற்றை ஏல விவகாரத்தில் இப்படித்தான் 1 லட்சத்து 72 ஆயிரம் கோடி ஊழல் என்று காங்கிரஸ் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டைக் கிளப்பினார்கள். அந்தக் குற்றச்சாட்டு இன்னமும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றபோதும் அதற்குப் பின்னால் காங்கிரஸால் மத்தியில் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. இப்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பாஜகவும் மத்திய அரசும் இதையும் கவனத்தில் கொள்வது நல்லது!