‘சொந்த ஊர்லயே நொந்துபோக வச்சுட்டாங்க!’ பண்ருட்டியாரிடம் புலம்பிய பன்னீர்செல்வம்!


‘சொந்த ஊர்லயே நொந்துபோக வச்சுட்டாங்க!’ - பண்ருட்டியாரிடம் புலம்பிய பன்னீர்செல்வம்

சென்னையின் சாலைகளில் வகை வகையான வாகனாதிகள் போக்கும் வரத்துமாகச் சீறிக்கொண்டிருக்க, பசுமைவழிச் சாலை மட்டும் பகல் நேரச் சோம்பலில் இருந்தது. அந்தச் சாலையில் அமைந்திருக்கும் அதிமுக(?) பிரமுகரின் இல்லத்துக்கு வெளியே, காவலுக்கு வந்த காக்கிச் சட்டைகளைத் தவிர கழகத் தொண்டர்கள் என யாரும் கண்ணில் படவில்லை.

வீட்டில், ‘என் காலம் வெல்லும்… வென்ற பின்னே வாங்கடா வாங்க’ எனும் தத்துவப் பாடலைத் தணிவான டெசிபலில் ஒலிக்கவிட்டபடி தன்னந்தனியராக அமர்ந்திருந்தார் - ஒருகாலத்தில் முதல்வராக இருந்த - ஓபிஎஸ். சுவரில் தொங்கிய புகைப்படத்தில் சாத்வீகமாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தார் சசிகலா. திடீரென அழைப்பு மணி ஒலிக்க, ‘நம்மளையும் ஞாபகம் வச்சுப் பார்க்க வந்திருக்கிற அந்த நல்லவர் யாரோ?’ எனத் தத்துவ விசாரம் விலகாமலேயே கதவைத் திறந்தார் ஓபிஎஸ்.

வாசலில்... பழம்பெரும் அரசியலர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

“எப்படி இருக்கீங்க? பெரியகுளத்துல உங்க வீடு இருக்கிற வீதியே வெறிச்சோடி கிடந்ததாகப் பேசிக்கிட்டாங்க… அதான் ஆறுதல் சொல்லலாம்னு வந்தேன்” என்றார் அரசியல் ஆலோசகர்.

“அதை வேற ஏன் ஞாபகப்படுத்துறீங்க அண்ணே? சொந்த ஊர்லயே நொந்துபோக வச்சுட்டாங்க. போதாக்குறைக்குப் பொதுக்குழுத் தீர்மானம் செல்லும்னு தீர்ப்பு வந்ததும், எங்க ஊர்லயே படபடன்னு வெடி வெடிச்சு வெறுப்பேத்திட்டாங்க எடப்பாடி ஆட்கள். சரி, பேச்சுத் துணைக்கு ஆள் இல்லையேன்னு பொறப்பட்டு வந்தா... இங்கேயும்...” எனச் சோர்ந்த முகத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தார் ஓபிஎஸ்.

“இதுக்கெல்லாம் அசந்துட்டா எப்படி? எம்ஜிஆர் பார்க்காத இன்னல்களா? ஜெயலலிதா சந்திக்காத சிக்கல்களா? ஆரம்பத்துல அலைக்கழிக்கிற மாதிரி இருந்தாலும் ஆரவாரமா வாகை சூடலாம். பழைய பன்னீர்செல்வமா வாங்க” என்று பதமாகச் சொன்னார் பண்ருட்டியார்.

“எனக்கு மனசு ஆறலைங்க” என்று இழுத்த ஓபிஎஸ், “இப்பக்கூட ஒரே மேடையில ஒண்ணரைக் கோடி ரூபாய் திரட்டிக் காட்டினேன். ஆனா, ஒருகாலத்துல ஒண்ணுமண்ணா நின்னவங்கள்லாம் இப்ப ஒதுங்கி ஓட ஆரம்பிச்சுட்டாங்க. ஓபிஎஸ்னாலே….” என்று ‘விலங்கு’ சீரியல் கிச்சா பாணியில் புலம்பினார்.

“நாமெல்லாம் அரசியல்வாதிகள் தம்பி. நாட்டு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள். காஞ்சியில புரட்சிப் பயணத்தைத் தொடங்கி புதிய பாதை அமைப்போம்” என்று பண்ருட்டியார் சொல்ல, “இப்படி நாடக பாணியில ஊடகங்கள்கிட்ட ஏதாச்சும் சொல்லிக்கலாம்ணே. உண்மை என்னன்னு உங்களுக்கும் எனக்கும் தெரியாதா? பாருங்க… நமக்கு ஆதரவா இருக்கார்னு நாம நம்பிக்கிட்டு இருக்கிற சின்னம்மாவையும் அவங்க பக்கம் சேர்க்க அடுத்த மூவ் ஆரம்பிச்சுட்டாங்க. சரி, இரண்டாவது ‘தர்மயுத்தம்’ ஆரம்பிக்கலாம்னு நினைச்சா, ஓடிடி-க்குப் பழகின தொண்டர்கள்லாம் ‘அதெல்லாம் ஓல்டு மூவி தலைவரே’ன்னு ஒதுங்குறாங்க. இருக்கிற பிரச்சினை போதாதுன்னு

இந்த ஆர்.எஸ்.பாரதி வேற அவங்க பிரச்சினையில என்னையக் கோத்துவிட்டுட்டாரு. அடுத்து அந்தக் கேஸ்லயும் ஆஜராகணும் போல” என்று படபடத்தார் பன்னீர்செல்வம்.

‘சொந்த ஊர்லயே நொந்துபோக வச்சுட்டாங்க!’ - பண்ருட்டியாரிடம் புலம்பிய பன்னீர்செல்வம்

“அதெல்லாம் விடுங்க. என்ன சாப்பிட்டீங்க? ஸ்விக்கில புளியோதரை ஆர்டர் பண்ணலாமா?” என்று பண்ருட்டியார் கேட்டதும், “எது? மதுரை மாநாட்டுல மிஞ்சிப்போய் மண்ணுல கொட்டுனாங்களே… அந்த ஐட்டமா?” என்று முகம் மலர்ந்தார் ஓபிஎஸ்.

“அப்பாடா! புளியோதரைன்னு சொல்லும்போதுதான் உங்க முகத்துல புன்னகையையே பார்க்க முடியுது” என்று சிரித்தார் பண்ருட்டியார்.

x