வக்பு வாரிய தலைவராக நவாஸ்கனி எம்.பி. தேர்வு


சென்னை: திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சியின் எம்.அப்துல் ரகுமான் கடந்த 2021 ஜூலையில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். பல்வேறு காரணங்களால் இவர் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதம் சில நாட்களுக்கு முன்பு ஏற்கப்பட்டது. இதையடுத்து, வக்பு வாரிய தலைவர் பதவியை மீண்டும் தங்களுக்கே வழங்குமாறு முதல்வர் ஸ்டாலினிடம் ஐயுஎம்எல் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, வாரிய உறுப்பினர் தேர்தலில் முஸ்லிம் எம்.பி.க்கான ஒரு காலி இடத்துக்கு ஐயுஎம்எல் கட்சியின் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, வேட்புமனு தாக்கல் செய்து, போட்டியின்றி தேர்வானார். இந்நிலையில், வக்பு வாரிய அலுவலகத்தில் நேற்று காலை நடந்த சிறப்பு கூட்டத்தில், வாரியத்தின் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் பின்னர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான், வக்பு வாரிய உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ், எம்.கே.கான், எஸ்.கே.நவாஸ், முகமது பஷீர், சையத் ரெய்ஹான்,பாத்திமா முசாபர், சிறுபான்மையினர் நல இயக்குநர் ஆசியா மரியம், வாரிய முதன்மை செயல் அலுவலர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மஸ்தான்,‘‘முதல்வர் ஆலோசனையின்பேரில், வக்பு வாரியத்தின் புதியதலைவராக நவாஸ்கனி எம்.பி., உறுப்பினர்களாக 2 எம்.பி.க்கள்,2 எம்எல்ஏக்கள், 2 பெண்களும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

வக்பு வாரியத்தின் புதிய தலைவர் நவாஸ்கனி கூறியதாவது: என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வக்பு வாரிய தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, முதல்வர், சிறுபான்மை நலத் துறை அமைச்சர், பரிந்துரைத்த ஐயுஎம்எல் தேசிய தலைவர்காதர் மொய்தீனுக்கு நன்றி. பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வளர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துஉறுப்பினர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம். வக்பு வாரிய நிலங்களை பாதுகாப்பது, இருக்கும் நிலங்களை முறையாக பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுவோம்.

சொத்துகள் பதிவு செய்யும்போது, வக்பு வாரியத்தில் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதை மாற்ற வேண்டும் என்று வாரிய உறுப்பினர்கள் கலந்து பேசி, முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். தடையில்லா சான்று கொடுப்பதை நிறுத்திவிட்டு, ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி, எளிதாக சொத்துகளை பத்திர பதிவு செய்ய அடுத்த கூட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடங்கள் முறையாக அடையாளம் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்

x