தீட்சிதர்கள் மீதான நில விற்பனை புகார்; சிதம்பரம் கோயிலுக்கு எவ்வளவு நிலம் உள்ளது? - உயர் நீதிமன்றம் கேள்வி


சென்னை: ‘சிதம்பரம் நடராஜர் கோயில் கடந்த 2008 முதல் 2014 வரை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஆண்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது. ஆனால், தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே வருமானம் ஈட்டுகிறது. எனவே, கோயில் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரி, உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை ஆணையர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்: பொது தீட்சிதர்கள் தரப்பு: நடராஜர் கோயிலுக்கு மன்னர்கள், புரவலர்கள் சுமார் 3,000 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய நிலையில் தற்போது 1,000 ஏக்கர் மட்டுமே உள்ளது. அந்த நிலத்தையும் அறநிலையத் துறை வட்டாட்சியர்தான் நிர்வகித்து வருகிறார். அதில் இருந்து வாடகை வருவாயாக வெறும் ரூ.93 ஆயிரம் மட்டுமே பெறப்படுகிறது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் வழங்கும் தட்சிணையை தீட்சிதர்கள் எடுத்துக் கொள்ளும் போதிலும், கோயில் நிர்வாகத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் பங்களிப்பு தொகையை வழங்குகிறோம். காணிக்கைக்கான வரவு செலவு கணக்கை பராமரிக்க தனி திட்டம் வகுக்கவும் தயாராக இருக்கிறோம். (நடராஜர் கோயிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்கு விவரங்கள் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.)

அறநிலையத் துறை தரப்பு: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 3,000 ஏக்கர் நிலம் இருந்த நிலையில், அதில் 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள்தான் அவர்கள் இஷ்டப்படி தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியது: இரு தரப்பு வாதங்களும் அதிர்ச்சி அளிக்கின்றன. கடந்த2017-18 முதல் 2021-22 வரையிலான வரவு செலவு கணக்கு புத்தகங்களை தீட்சிதர்கள் தாக்கல் செய்ய வேண்டும். பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகள், செலவுகள் குறித்துகணக்கு வைப்பதற்கான நடைமுறையை உருவாக்கி, அதன் வரைவு அறிக்கையை தீட்சிதர்கள் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும்.

கோயிலுக்கு சொந்தமாக தற்போது எவ்வளவு ஏக்கர் உள்ளதுஎன்பது குறித்து வட்டாட்சியர் அறிக்கை தர வேண்டும். 2,000 ஏக்கர் நிலங்களை தனிநபர்களுக்கு தீட்சிதர்கள் விற்றார்கள் எனில், அதுகுறித்த விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக். 3-க்கு தள்ளிவைத்தனர்

x