கோவை: ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக தவறான கருத்து நிலவுகிறது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்நேற்று கூறியதாவது: `ஒரே நாடு,ஒரே தேர்தல்' என்பது வரவேற்கத்தக்கது. இதனால் மக்களின் நேரம், வரிப்பணம் சேமிக்க முடியும். வெளிநாடுகளுக்குச் சென்று அதிக முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வருவதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது. கமிஷன், ஊழல் உள்ள வரை தமிழகத்தில் தொழிற்சாலைகளை சிறப்பான முறையில் நடத்த முடியாது.
குழந்தைகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் முட்டை, வெளிக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கல்வித் துறையில் நிலவும் முறைகேடுகள் தொடர்பாக துறை அமைச்சர் நடவடிக்கைஎடுக்க வேண்டும். மது ஒழிப்பு மாநாட்டை திருமாவளவன் நடத்துவது, அவர்களது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தவா என்று பலரும் கேள்வி கேட்கின்றனர். திருமாவளவன் எதிர்பார்த்த திருப்பம் நடக்கவில்லை. முதல்வரை சந்தித்த பின், அவர் மிரண்டுபோய் வந்தார்.
திமுக பவள விழா தொண்டர்களுக்காக நடத்தப்படவில்லை. உதயநிதி முடிசூடுவதற்கான ஆரம்ப விழாவாகும். திமுகவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்போது உதயநிதி தலைமை வகிப்பார். 125-வது ஆண்டு விழாவின்போது உதயநிதியின் மகன் தலைமை வகிப்பார். திமுகவில் தொண்டர்கள் உழைத்து கொண்டேஇருக்க வேண்டும், அதைக் கொண்டு கருணாநிதி குடும்பம் பிழைத்துக்கொண்டே இருக்கும்.
தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்கள் சேவைப் பணிகளில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக தவறான கருத்துகள் நிலவி வருகின்றன. முன்பு பன்னுக்கு 12 சதவீத வரிஇருந்தது. தற்போது 5 சதவீதமாககுறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியால் அனைத்து பொருட்களின் விலையும் குறைந்துள்ளது என்பதுதான் உண்மை. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்