கரூர் வெண்ணெய்மலையில் கடைகளுக்கு சீல் - பொதுமக்கள் எதிர்ப்பால் தள்ளுமுள்ளு


கரூர் வெண்ணெய்மலையில் இந்து சமய அறநிலையத்துறை கடைகளுக்கு சீல் வைப்பதை அடுத்து அங்கு திரண்டிருந்த மக்கள்.

கரூர்: கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலையொட்டி காதப்பாறை பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள், கடைகள் உள்ளன. இவை கோயிலுக்கு சொந்தமான இடம் எனக் கூறப்படுகிறது.

கோயில் நிலங்களை மீட்பது குறித்து திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக 2019ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ராதாகிருஷ்ணன் அண்மையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார். இதையடுத்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இது கோயில் நிலம் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து காவல் துறை பாதுகாப்புடன் இன்று (செப். 19ம் தேதி) காலை வெண்ணெய்மலையில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத் துறையினர் மேற்கொண்டனர். அப்போது அதிகளவில் பொதுமக்கள் திரண்டதால் அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், ரமணிகாந்தன், ஏடிஎஸ்பி-யான பிரேம் ஆனந்த், டிஎஸ்பி-யான செல்வராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெண்ணெய்மலை பகுதியில் உள்ள 3 கடைகளுக்கு மாலை 4 மணிக்கு சீல் வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் திரண்ட மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

x