ஒரே நேரத்தில் மதுரை அரசு மருத்துமனை டீன், சிஇஓ, மாநகராட்சி துணை ஆணையர்கள் பணியிடங்கள் காலி!


மதுரை: மதுரை மாநகராட்சி துணை ஆணையர்கள் இருவர், அரசு ராஜாஜி மருத்துவமனை டீன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் போன்ற முக்கிய அரசு அதிகாரிகள் பணியிடங்கள் ஒரே நேரத்தில் காலியாக உள்ளன. அதனால் மருத்துவம், கல்வி, மாநகர நிர்வாகப் பணிகளில் தோய்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியின் முதன்மை அதிகாரியான ஆணையாளர் தினேஷ்குமாருக்கு, நிர்வாகப் பணிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் அவருக்கு கீழ், இரண்டு துணை ஆணையர்கள் சரவணன், தயாநிதி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். தயாநிதி கடந்த ஜூன் 30ம் தேதி ஒய்வு பெற்றார். சரவணன், செங்கல்பட்டுக்கு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக இடமாறுதல் பெற்றுள்ளார். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக இந்த இரு முக்கியப் பணியிடங்களும் காலியாக உள்ளது.

அதனால், ஆணையாளர் தினேஷ்குமாரே, இவர்கள் பணிகளையும் சேர்த்து பார்ப்பதால் மாநகர நிர்வாக, வருவாய் பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த கார்த்திகா கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அலுவலராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக புதியவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு அதிகாரி நியமித்து, கல்வித்துறை பணிகள் மேற்பார்வை செய்யப்படுகிறது.

தற்போது காலாண்டு தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் பொறுப்பு முதன்மை கல்வி அதிகாரிக்கு உள்ளது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலர் மேல்நிலை கல்விக்கு செல்லாதவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் பொறுப்பும் உள்ளது. தற்போது முதன்மை கல்வி அலுவலர் இல்லாததால் இப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டீனாக இருந்த இருந்த பேராசிரியர் ரெத்தின வேலு ஏப்ரல் மாதம் ஒய்வு பெற்ற பிறகு தற்போது வரை புதிய டீன் நியமிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக பொறுப்பு டீனாக பேராசிரியர் தர்மராஜ் நியமிக்கப் பட்டிருந்தார். அவரும் ஒய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதிலாக தற்போது இருதவியல் துறை பேராசிரியர் டாக்டர் செல்வராணி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பொறுப்பு டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 6 மாதமாக மதுரை அரசு மருத்துவமனை நிரந்தர டீன் இல்லாமல் பொறுப்பு டீனை கொண்டு நிர்வாகம் நடத்தப்படுதால் மருத்துவ நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் அரசு நிர்வாகப் பொறுப்புகளில் உள்ள இந்த முக்கிய பணியிடங்கள் ஒரே நேரத்தில் காலியாக உள்ளதால் கல்வி, மருத்துவம், மாநகராட்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

x