மதுரை மாநகராட்சியில் ஓர் ஆண்டில் ரூ.15 கோடி சொத்து வரி வருவாய் உயர்வு - சாத்தியமானது எப்படி?


மதுரை: சொத்து வரி குறைப்பு விவகாரத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் எடுத்த நடவடிக்கையால், மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.15 கோடி வருவாய் அதிகரித்துள்ளது. ஓர் ஆண்டில் இவ்வளவு பெரிய தொகை வருவாயாக கிடைக்க ஆணையாளர் வணிக கட்டிடங்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சொத்து வரி வசூலே மாநகராட்சிக்கு பிரதான வருவாய் இனமாக இருக்கிறது. ஆனால், சொத்து வரி நிர்ணயம் செய்வதில் வருவாய் பிரிவை சேர்ந்த பில் கலெக்டர்கள் முதல் அதிகாரிகள் வரை, கடந்த காலத்தில் பணம் பெற்றுக் கொண்டு கட்டிடங்களை குறைவாக அளவீடு செய்தும், வணிகக் கட்டிடங்களை குடியிருப்புக் கட்டிடங்களாக பதிவு செய்தும் சொத்து வரியை பல மடங்கு குறைவாக நிர்ணயம் செய்து மதுரை மாநகராட்சிக்கு கோடிக் கணக்கில் நிதி இழப்பு செய்து வந்துள்ளனர்.

மாநகராட்சி ஆணையாளராக வரக்கூடியவர்கள், அன்றாடம் அலுவலக நிர்வாகப் பணி, குடிநீர், சுகாதாரம், பாதாளச் சாக்கடை போன்ற பணிகளிலே மூழ்கிவிடுவார்கள். மேலும், மேயர், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் கூறும் வார்டு பிரச்சினைகளை ஆய்வு செய்வது, மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவது, கண்காணிப்பது போன்ற பணிகளிலே ஆணையாளராக இருக்கக் கூடியவர்களுக்கு கவனம் செலுத்துவதற்கு நேரம் சரியாகிவிடும்.

அதனால், அவர்கள் வருவாய் பிரிவு அதிகாரிகளை அழைத்து வரிவசூலை அதிகரிக்க முடுக்கிவிடுவார்களே தவிர, வரி நிர்ணயத்தில் நடக்கக் கூடிய தவறுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில் நேரமும், ஆர்வமும், சிந்தனையும் இருக்காது. ஆனால், தற்போதைய மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், அன்றாட பணிகளுக்கு இடையே புதிய கட்டிடங்களை அளவிடுவது முதல் சொத்து வரி நிர்ணயம் செய்வது, கட்டிடங்களை ‘ஏ’, ‘பி‘, ‘சி’ என வகைப்படுத்துவது, கடந்த காலத்தில் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்ட கட்டிடங்கள் ஆய்வு மற்றும் வரி வசூலை தீவிரப்படுத்துவது வரை நுட்பமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கடந்த மாதம், 150 கட்டிடங்கள் வரை சொத்துவரியை குறைவாக நிர்ணயம் செய்ததை கண்டறிந்து மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி வருவாய் (அரையாண்டுக்கு ரூ.1.50 கோடி) வருவாய் அதிகரிக்கச் செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக தற்போது மாநகராட்சியில் உள்ள வணிக கட்டிடங்கள் அனைத்தையும் மறுஅளவீடு செய்வதற்கு உத்தரவிட்டு உதவி ஆணையாளர் தலைமையில் வருவாய் பிரிவு ஊழியர்கள் முக்கிய சாலைகளில் உள்ள வணிக கட்டிடங்களை ஆய்வு செய்தனர்.

இதில், 1,550 வணிக கட்டிடங்களை குடியிருப்புகளாக காட்டி ஏமாற்றி மாநகராட்சிக்கு அரையாண்டுக்கு ரூ.6 கோடி வரை இழப்பீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம், மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.12 கோடி தற்போது சொத்துவரி வருவாய் அதிகரித்துள்ளது. இந்த இரண்டு நடவடிக்கைகள் மூலம் மாநகராட்சிக்கு தற்போது சொத்து வரி வருவாய் ஆண்டிற்கு ரூ.15 கோடி வரை அதிகரித்துள்ளது. மாநகராட்சி ஆணையாளரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மின் வாரியத்திடம் வணிக மின் இணைப்பு கட்டிடங்கள் பட்டியலை கேட்கும் மாநகராட்சி: "ஆணையாளர் தினேஷ்குமார், அடுத்தக் கட்டமாக மின்சார வாரியத்தில் மாநகராட்சிக்குட்பட்ட வணிக பயன்பாட்டு மின் இணைப்பு கட்டணம் செலுத்தும் கட்டிடங்கள் பட்டியலை கேட்டுள்ளார். அந்த கட்டிடங்கள் பட்டியலை பெற்றாலே மாநகராட்சி பணியாளர்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய அவசியம் இருக்காது. 100 வார்டுகளிலும் உள்ள வணிக கட்டிடங்கள் முழு பட்டியலும் கிடைத்துவிடும்.

அந்த பட்டியில் உள்ள கட்டிடங்களை கொண்டு எந்தெந்த கட்டிடங்கள் குடியிருப்பு கட்டிடங்களாக உள்ளன என்பதை கணக்கெடுத்து, அவற்றை வணிக, சொத்து வரி பட்டியலில் சேர்த்து கூடுதல் சொத்து வரி நிர்ணயம் செய்வதற்கு ஆணையாளர் தினேஷ்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். அவரின் இந்த நடவடிக்கையால் இதுவரை குடியிருப்புகள் அடிப்படையில் சொத்து வரி செலுத்தி வரும் வணிக கட்டிட உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

x