ராமநாதபுரம் அருகே கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மனைவிக்கு கோயில் கட்டி கணவர் வழிபட்டு வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூரைச் சேர்ந்தவர் இளையராஜா(50). இவர் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (40). ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2020-ல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பு இளையராஜாவை மிகவும் பாதித்தது.
இவர் தனது மனைவியின் மீது கொண்ட மாறாத அன்பால் அவரது நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். அதன் காரணமாக பாண்டியூர் அருகே மனைவிக்கு கோயில் கட்டி அதில் அவரது உருவச்சிலையை அமைத்தார். அதோடு தினமும் மனைவியின் சிலையை வணங்கி தனது தொழிலை நடத்தி வருகிறார்.
மனைவிக்கு மட்டுமின்றி அந்த பகுதியில் சிவன் கோயில் ஒன்றையும் உருவாக்கி அதில் இஷ்ட தெய்வங்களின் சிலைகளை இளையராஜா பிரதிஷ்டை செய்துள்ளார். அத்துடன் மனைவியின் சிலையையும் இணைத்துள்ளார்.
இதுகுறித்து இளைஞராஜா கூறுகையில், பொதுமக்களுக்கு மருத்துவ சேவை செய்த மனைவி கலைச்செல்வி கடவுளிடம் தஞ்சமடைந்துவிட்டார். அதனால், அவரின் நினைவாக கோயில் கட்டிவணங்கி வருவதாகவும், பவுர்ணமி, கார்த்திகை உள்ளிட்ட முக்கிய தினங்களில் இப்பகுதியில் வரும் வழிப்போக்கர்களுக்கு அன்னதானம் வழங்கி வருவதாகவும் கூறுகிறார்.
இதற்கு அவரது மகன் ஸ்ரீஹரி பாண்டியனும், மகள் சவுந்தர்யாவும் உறுதுணையாக இருப்பதாகவும், ன் மனைவி செய்த சேவையை விட இது சிறியது தான் என்று தெரிவிக்கிறார். மனைவிக்கு கோயில் கட்டி கணவர் வணங்கி வருவது இப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...