அதிர்ச்சி... வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த பாஜக தலைவர் உள்பட 2 பேர் கைது!


பாஜக தலைவர் ஜானகிராமன்

சென்னையில் பழைய இரும்பு பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த பாஜக தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வானகரம் பிள்ளையார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (48). இவர் அதே பகுதியில் உள்ள பிரகா யுகா ஸ்கிராப் என்ற தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

சுகுமார்

இந்நிலையில் கடந்த வருடம் வினோத்குமாருக்கு மறைமலை நகரைச் சேர்ந்த சுகுமார் என்பவர் அறிமுகமானார். அவர், காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனக்குத் தெரிந்த கம்பெனி உள்ளது என்று கூறியுள்ளார்.

அதில் உள்ள பழைய கழிவுப்பொருட்களை (scrap) குறைந்த விலையில் தானும், தனது நண்பருமான காற்றம்பாக்கம் பாஜக தலைவர் ஜானகிராமன் இருவரும் சேர்ந்து எடுத்து தருவதாக தெரிவித்துள்ளார். அவரின் ஆசை‌ வார்த்தையை நம்பி வினோத்‌ சிறுக, சிறுக 25 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார்.

இந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட சுகுமார் மற்றும் ஜானகிராமன் ஆகிய இருவரும் குறிப்பிட்டது போல் பழைய‌ கழிவுப் பொருட்களை வாங்கி தராமல் ஏமாற்றி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த வினோத்குமார் பணத்தைத் திரும்பி தருமாறு கேட்டார்.

அப்போது பணத்தை அடுத்த மாதம் தருவதாக கூறி இழுத்தடித்துள்ளனர். அத்துடன் ஓரு கட்டத்தில் வினோத்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவர், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் புகாரில் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கைது

இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் வினோத்குமார் வழக்குத் தொடர்ந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுகுமார், பாஜக பிரமுகர் ஜானகிராமன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆசைவார்த்தை கூறி வியாபாரியிடம் ரூ.25 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் பாஜக தலைவர் கைது செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


HBD Napoleon| திரையில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ!

x