மிஸ் பண்ணாதீங்க... தமிழகம் முழுவதும் இன்று மருத்துவக் காப்பீடு முகாம்!


அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு 100 இடங்களில் காப்பீட்டுத் திட்டத்துக்கான முகாம்கள் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் 100 சட்டமன்றத் தொகுதிகளில் 100 முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளைக் கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டமும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சுமார் 1.44 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) பயன்பெற்று வருகிறார்கள்.

கடந்த 18-ம் தேதி நடக்கவிருந்த சிறப்பு முகாம், சில நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.. அதற்குப் பதிலாக, இன்று சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பலன்பெறலாம் என்றும் சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டது.

அந்த வகையில், இன்று தமிழகம் முழுவதும் சுமார் 100 இடங்களில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 5 இடங்களில் முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

x