டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால், பதவி விலக வேண்டுமா என்ற கேள்வியை டெல்லி மக்கள் மன்றத்தின் முன்வைத்து ஆம் ஆத்மி கட்சி மக்களைச் சந்தித்து வருகிறது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அப்படி அவர் கைது செய்யப்பட்டால், டெல்லி அரசு ஒட்டு மொத்தமாக முடங்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில் முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்வார் என்ற தகவல் பரவியுள்ளது.
இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா என்ற கேள்வியை முன்வைத்து ஆம் ஆத்மி கட்சியினர் வீடு, வீடாகச் சென்று மக்களிடம் கருத்துக் கேட்டு வருகின்றனர்.
இதுகுறித்து டெல்லி அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், "முதல் நாளில் லட்சுமி நகர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் பேசினோம். இதுவரை, நாங்கள் பேசியவர்கள், கேஜ்ரிவால் பொதுமக்களுக்காக நிறைய பணிகளைச் செய்துள்ளார் என்று கூறுகிறார்கள்.
இலவச மின்சாரம், குடிநீர், மருத்துவம், கல்வி, பெண்களுக்கு பஸ் பயணம், முதியோர் யாத்திரைக்கு வசதி செய்து கொடுத்த முதல்வர், பதவி விலகாமல் சிறையில் இருந்து ஆட்சியை நடத்த வேண்டும். சதித் திட்டத்தின் கீழ் இந்தக் கைதுகள் நடக்கின்றன என்றும் மக்கள் உறுதியாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் பதவி விலகக் கூடாது. மக்களவை தேர்தலில் தோல்வி பயத்தில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது" என்றார்.