தொழில் முனைவோரான 33,000 இளைஞர்கள்: அசோசெம் மாநாட்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்


சென்னை: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் உட்பட 5 திட்டங்களின்கீழ் ரூ.1,104.78 கோடி மானியத்துடன் ரூ. 2,993.97 கோடி வங்கி கடனுதவி வழங்கி 33,466 இளைஞர்களை புதிய தொழில் முனைவோராக உருவாக்கி உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையான அசோசெம் சார்பில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து அமைச்சர் பேசியதாவது:

தொழில் துறையில் இந்திய அளவில் தமிழகம் உள்நாட்டு உற்பத்தியில் 9.07 சதவீதம் பங்களிப்புடன் 2-ம் இடத்திலும் ஏற்றுமதியில் 9.5 சதவீதம் பங்களிப்புடன் 3-ம் இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் 26.61 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கி தேசிய அளவில் 2-ம் இடத்தில் உள்ளது.

காஞ்சி திருமுடிவாக்கத்தில் ரூ.47. 62 கோடியில் தொழில்நுட்ப கருவிகளை பரிசோதிக்கும் உயர் தொழில்நுட்ப பரிசோதனைக் கூடமும் திண்டிவனத்தில் ரூ.155கோடியில் மருந்தியல் பெருங்குழுமமும் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. திமுக அரசு பொறுப்பேற்று இதுவரை ரூ.203.95 கோடியில் ரூ. 161. 38 கோடி மானியத்துடன், 43 குறுந்தொழில் குழுமங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்8,598 ஏக்கரில் 15,171 தொழில்மனைகள், 130 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.295 கோடியில்512 ஏக்கர் பரப்பில் 8 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் 248.01 ஏக்கரில் ரூ.115.53 கோடி மதிப்பில் 8 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 8 மாவட்டங்களில் 283.40 ஏக்கர் பரப்பில்ரூ.115.64 கோடியில் 10 புதிய தொழிற்பேட்டைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 5 இடங்களில் ரூ.208.51 கோடியில் அடுக்குமாடி தொழில் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ் இதுவரை 38,270 தொழில்முனைவோரின் ரூ.5,715 கோடி வங்கி கடனுக்கு, மாநில அரசின் கடன் உத்தரவாதமாக ரூ.563.12 கோடி அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு வர்த்தக வரவுகள்மற்றும் தள்ளுபடி தளம்- திட்டத்தின்கீழ் 1,491 நிறுவனங்களுக்கு ரூ.2,139கோடி மதிப்பில் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, வேலூர், தூத்துக்குடி மண்டலங்களில் உள்ள வசதியாக்கல் மன்றங்கள் மூலம் 2,008 நிறுவனங்களுக்கு ரூ. 374.76 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களின்கீழ் ரூ.1,104.78 கோடி மானியத்துடன் ரூ.2,993.97 கோடி வங்கி கடனுதவி வழங்கி 33,466 இளைஞர்கள் புதிய தொழில்முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் 3 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், துறை செயலர் அர்ச்சனா பட்நாயக், நபார்டு தலைமை பொது மேலாளர் ஷாஜி, தேசிய எம்எஸ்எம்இ நிறுவன இயக்குநர் சஞ்சு குளோரி ஸ்வரூபா, எல்ஐசி தென்னிந்திய மண்டல மேலாளர் வெங்கடரமணன், அசோசெம் தலைவர் சுஷ்மா பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x