வழக்கு ஆவணங்களின் தமிழ் நகலை வழங்காததால் குண்டர் சட்ட உத்தரவுகள் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி


மதுரை: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவோருக்கு ஆவணங்களின் தமிழ் நகலை வழங்காததால், குண்டர் சட்ட உத்தரவுகள் ரத்துசெய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் குண்டர் சட்ட உத்தரவுகளை ரத்து செய்யக்கோரும் ஆட்கொணர்வு மனுக்களை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு விசாரித்து வருகிறது. இது தொடர்பான மனுக்களை நீதிபதிகள் நேற்று விசாரித்தனர். தொடர்ந்து நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவோருக்கு, அந்த உத்தரவு தொடர்பான ஆவணங்களின் தமிழ்நகல் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், உரிய நேரத்தில் தமிழ் நகல் வழங்கப்படாத காரணத்தால், ஏராளமான குண்டர் சட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பதிவாளர், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமைநீதிபதி முன்பு இந்த விவகாரத்தை கொண்டுசெல்ல வேண்டும். இது தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க, தமிழக உள்துறை துணைச்செயலர், தென் மண்டல காவல் துறை தலைவர் ஆகியோர் நாளை (இன்று) மாலை 5 மணிக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்

x