புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை சமாதிக்கு மாதம் ரூ.15,000 வாடகை: ஆளுநரிடம் புகார் 


புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இறந்த பிறகு அதன் சமாதிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 வாடகை தருவது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனிடம் திருக்கோயில்கள் பாதுகாப்பு கமிட்டி தரப்பில் மனு தரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கமிட்டியின் பொதுச் செயலாளர் தட்சிணாமூர்த்தி இன்று அளித்துள்ள மனு விவரம்: “புதுச்சேரியில் உலகப் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி 27 ஆண்டுகள் கோயிலுக்காக பூஜை செய்தது. அந்த யானை கடந்த 30.11.2022 அன்று காலமானது. கோயில் யானை லட்சுமி வனத்துறை அருகே உள்ள காலத்தீஸ்வரர் கோயில் இடத்தில் சமாதி அமைந்துள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வாடகையாக தரப்படுகிறது. கோயில் யானைக்கு சமாதி வைக்க உலகில் யாரும் வாடகை கொடுத்தது இல்லை. இதில் ஊழல் நடந்துள்ளது.

துணைநிலை ஆளுநர் இது தொடர்பாக விசாரணை உத்தரவிட வேண்டும். இரண்டு கோயில்களுமே அரசு கட்டுப்பாட்டில் உள்ளவை. அப்படி இருக்க கோயில் யானை லட்சுமி சமாதிக்கு வாடகை தருவதாக எவ்வாறு இந்து அறநிலையத்துறை ஏற்றுக் கொண்டது என்பதை தெரிவிக்க வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

x