ஜனநாயகத்தின் போர்வையில் நாட்டில் சர்வாதிகார ஆட்சி; இந்தியா கூட்டணியே வெல்லும்... அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!


அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்த திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம்.

ஜனநாயகம் என்ற போர்வையில் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அதை முறியடிப்பதற்கு இந்தியா கூட்டணி என்ற மாபெரும் கூட்டணியை உருவாகியுள்ளது என தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்

திண்டுக்கல் மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து ஆதரவு திரட்டினார். வேட்பாளருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஐ. பெரியசாமி

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “ திண்டுக்கல் தொகுதியின் வெற்றி உறுதியாகிவிட்டது. கடந்த முறை தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுதியில் வெற்றி பெற்றதைப்போல இந்தமுறை மீண்டும் வெற்றி பெறுவோம். பிரச்சாரத்தில் வைக்கக்கூடிய முக்கிய கோரிக்கை மாநில உரிமைகளை மீட்பது தான். ஜனநாயகம் என்ற போர்வையில் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அதை முறியடிப்பதற்கு இந்தியா கூட்டணி என்ற மாபெரும் கூட்டணியை உருவாக்கி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இந்த தேர்தலில் களம் காண்கிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற பொதுவுடையை அடிப்படையில் செயல்படக்கூடிய கட்சி திமுக.

அமைச்சர் அர.சக்கரபாணியை சந்தித்த திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம்.

1967 ல் திமுக ஆட்சிபீடம் ஏற உறுதுணையாக இருந்த இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கொள்கையில் உறுதியாக இருக்கக்கூடிய கட்சிகள் ஒரு அணியிலும், கொள்ளை இல்லா கட்சிகள் ஒரு அணியிலும் உள்ளன. கொள்கையோடு இருக்கின்ற எங்கள் அணியை மக்கள் வெற்றிபெறச்செய்வர்” என்றார்.

தொடர்ந்து அமைச்சர் அர.சக்கரபாணியை திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் சந்தித்து ஆதரவு கோரினார். உடன் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி உள்ளிட்டோர் இருந்தனர்.

x