அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் மீண்டும் திண்டுக்கல் தொகுதியை கூட்டணிக்கட்சிக்கு தாரைவார்க்க அதிமுக தலைமை தயாராகிவருகிறது. இங்கு போட்டியிட கூட்டணிக்கட்சியான எஸ்டிபிஐ கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
அதிமுக துவங்கியவுடன் முதன்முதலாக எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் தற்போது வரை கட்சியின் சின்னமாக உள்ள இரட்டை இலை கட்சிக்கு முதன்முறையாக கிடைத்தது. இதில் அதிமுக முதல் வெற்றியை பெற்றது. இதையடுத்து எம்ஜிஆர், அவரை தொடர்ந்து ஜெயலலிதா என அதிமுகவை நிர்வகித்து வந்த தலைவர்கள் தொடர்ந்து திண்டுக்கல் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்காமல் போட்டியிட்டு வந்தனர்.
ஆனால், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.க., போட்டியிட்டது. இதற்கு காரணம் திண்டுக்கல் மாவட்டத்தில் அப்போது அமைச்சராக இருந்த திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சரான நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோருக்கிடையேயான கோஷ்டி பூசல் தான் காரணம் என கூறப்பட்டது. கடந்தமுறை திண்டுக்கல் தொகுதியில் திமுக வேட்பாளர் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதால், இந்த முறையும் அதிமுகவினர் போட்டியிட அதிக ஆர்வம் காட்டவில்லை.
அதேபோல, திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் அமைச்சர்களும் தங்கள் வாரிசுகளை களம் இறக்க முன்வரவில்லை. இதனால் பிற கட்சியினரும் சீட் கேட்பதில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிக்கொண்டனர். கட்சிக்கு நிதியாக இருக்கட்டும் என பலரும் விருப்பமனுத்தாக்கல் செய்தனர். இதில், சீ்ட் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என அச்சத்தில் இருப்பவர்கள் பலர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளில் ஒருவர் அதிமுக வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டால் ஆளுங்கட்சிக்கு ஈடுகொடுத்து தேர்தல் செலவுசெய்ய முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரும்பியபோதும் முன்னாள் அமைச்சர்கள் இருவரும் தங்கள் வாரிசுகளை களம் இறக்க முன்வரவில்லை.
இதனால் கூட்டணிக்கட்சிக்கே கடந்தமுறையை போல திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கிவிடலாமா என்ற நிலைக்கு அதிமுக தலைமையை தள்ளியுள்ளனர். அதிமுகவின் கூட்டணிக்கட்சியான எஸ்டிபிஐ கட்சி திருநெல்வெலி, திண்டுக்கல் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என அதிமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இதனால் இந்தமுறையும் திண்டுக்கல் தொகுதி மீண்டும் கூட்டணிக்கட்சிக்கே செல்ல வாய்ப்புள்ளது என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதும் கடைசி முயற்சியாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனின் மகனை தேர்தலில் போட்டியிடச்செய்ய, கட்சித்தலைமை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. கடைசி வரை முன்னாள் அமைச்சர் பிடிகொடுக்காவிட்டால், திண்டுக்கல் தொகுதியை எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்குவது என அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.