நிபா வைரஸ் அலர்ட்: கேரளாவில் இருந்து வருவோர் பரிசோதனைக்கு பின்னரே குமரியில் அனுமதி


கேரளாவில் இருந்து வாகனங்களில் வருவோரை களியக்காவிடளை சோதனை சாவடியில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளும் குமரி சுகாதாரத்துறையினர்.

நாகர்கோவில்: நிபா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் வாகனங்களை களியக்காவிளை எல்லையில் சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் இறந்தார். இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 175 பேரின் திரவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், மலப்புரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகள் நிபா வைரஸ் பாதிப்பால் கட்டுப்பாடு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் கேரள சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கேரள மாநிலத்தை ஒட்டிய பிற மாநிலங்களும் கண்காணிக்கப்படுகிறது. கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். களியக்காவிளை சோதனைச் சாவடியில் இன்று சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர். கேரளாவில் இருந்து வாகனங்களில் வருவோரை தெர்மா மீட்டர் உதவியுடன் காய்ச்சல் சோதனை செய்த பின்னரே குமரி எல்லைக்குள் சுகாதாரத் துறையினர் அனுமதிக்கின்றனர். சுகாதார ஆய்வாளர்கள் ஸ்ரீகுமார், ஜோபின், ஜஸ்டின்ராஜ் மற்றும் அலுவலர்கள் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

களியக்காவிளை, காக்கவிளை சோதனை சாவடிகளில் இந்தச் சோதனைகள் நடக்கின்றன. சுகாதாரத்துறையின் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் 3 சுற்றுகளாக விடிய விடிய இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். களியக்காவிளை எல்லையில் நடத்தப்படும் சோதனையின் போது காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றால், திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றால், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுவார்கள்.

குமரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் யாரேனும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டால், அதுபற்றி சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். நிபா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவனையில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

x