தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் உள்ள பூங்காக்களை மறுஉத்தரவு வரும் வரை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பருவமழை வெளுத்து வாங்குகிறது. அதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை விட்டு விட்டு கொட்டி வருகிறது.
இதனால் தாழ்வான பல இடங்களிலும் தண்ணீர் குளம் போல தேங்கியது. இந்த நீரை உடனுக்குடன் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலன இடங்களில் வெள்ளநீர் வழிந்தோடியது. இன்று மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனிடையே இன்று முதல் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மழையை எதிர்கொள்ள அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை அனைத்து பூங்காக்களையும் மூட வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.