திமுக சாயலில் இன்னொரு கட்சி தேவையில்லை: தமிழக வெற்றிக் கழகம் குறித்து தமிழிசை கருத்து


பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, சென்னை தி.நகர், கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவரும். முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். | படம் : ம.பிரபு |

சென்னை: திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவையில்லை என தமிழக வெற்றிக் கழகம் குறித்து முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை, தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை, தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்வில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று, தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமரின் பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு தொண்டரும் 74 உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளோம். ஆட்சியமைத்த 100 நாட்களில் மற்ற பிரதமர் செய்யாததை பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கிறார். இதுவரை ரூ.15 லட்சம் கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் ரூ.473 கோடியில் சரக்கு முனையம் தொடங்கியதற்கு அந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பிரதமருக்கு நன்றி தெரிவிக்கவில்லை. இவ்வாறு மத்திய அரசு கொடுக்கும்திட்டங்களை இருட்டடிப்பு செய்துவிட்டு, மத்திய அரசின் பங்கே தமிழக வளர்ச்சியில் இல்லை என்னும்தோற்றத்தை திமுக ஏற்படுத்த முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

மதுவிலக்கு மாநாட்டுக்கு அதிமுகவை அழைப்போம் என சிறுத்தையாகத் தொடங்கிய திருமாவளவன், முதல்வர் ஸ்டாலினை பார்த்து வந்த பிறகு சிறுத்து போய்விட்டார். தேசிய மதுக் கொள்கை வேண்டுமாம். தேசிய அளவில் படிப்பதற்கு கொள்கை கொடுத்தால் ஒப்புக் கொள்ளாதவர்கள், தேசிய அளவில் குடிப்பதற்கு கொள்கை கொடுத்தால் மட்டும் ஒப்புக்கொள்வார்களா?

பெரியார் கொள்கைக்கு நாங்கள் எதிராக இருந்தாலும், கருப்பு சட்டை அணிவோருக்கு காவிகளின் வாழ்த்துகள். திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவையில்லை. தேசிய சாயலில்தான் மாற்று வர வேண்டும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேறு வழியில் பயணிப்பார் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கட்சித் தொடங்கும் முன்னரே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது போன்றவற்றை முன்வைத்து கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தேசியத்துடன் வந்தாலாவது பரந்துபட்ட மனதோடு எடுத்துச் செல்வோம். திராவிட சாயத்தை பூசினால் அவ்வளவுதான். இரு கட்சியினரும் அவரை விட்டுவிடுவார் களா? தமிழக அரசியல்வாதிகளின் பிள்ளைகளில் எவ்வளவு பேர் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் சமச்சீர் கல்வியில் படிக்கின்றனர்? இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x