சென்னை: அரசு பள்ளியில் ஆன்மிக சொற் பொழிவாளர் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 28-ம் தேதி தன்னம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு சொற்பொழிவு வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையானது.
அதிகாரிகள் குழு அறிக்கை: இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 2 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதனுடன் சொற்பொழிவாளர் மகா விஷ்ணுவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மறுபுறம் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தலைமையி லான அதிகாரிகள் குழுவும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவந்தது.
அதன்படி அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் எஸ்எம்சி உறுப்பினர்களிடம் நிகழ்ச்சி தொடர்பாக இயக்குநர் குழு விசாரணை நடத்தியது.
அதன் அடிப்படையில் தமிழக அரசிடம் செப்.13-ம் தேதிஅறிக்கை தாக்கல் செய்யப் பட்டது. அதில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அ.மார்ஸ் ஒப்புதலின் பேரிலேயே இந்த 2 அரசுப் பள்ளிகளிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தற்போது சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் மீது பணியிட மாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தஞ்சை சரபோஜி மன்னர்நூலகத்தின் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக வும் தகவல் வெளி யாகியுள்ளது.
புதிய அதிகாரி: அதேபோல், சென்னை மாவட்டத்துக்கு புதிய முதன்மைக் கல்வி அதிகாரியாக இதற்குமுன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய ஏஞ்சலோ இருதயசாமி நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அதி காரிகள் தெரிவித்தனர்.