தெற்கு ரயில்வேயில் 15 நாட்களுக்கு சிறப்பு தூய்மை பிரச்சாரம் தொடங்கியது


சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட 6 கோட்டங்களில், 15 நாட்கள் சிறப்பு தூய்மை பிரச்சாரம் நேற்று தொடங்கியது. ரயில்நிலையங்கள், அலுவலகங்களில் தூய்மை பிரச்சாரம், தூய்மை பணிகள் நடைபெறவுள்ளன.

இந்திய ரயில்வேயில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில்தூய்மை வாரம் கடைபிடிக்கப்படுகிறது. ரயில் நிலையங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் முழுமையான தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் 6 கோட்டங்களில் 15 நாட்கள் சிறப்புதூய்மை பிரச்சாரம் தொடங்கியது.

இதன்படி, சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் தூய்மை பிரச்சாரம் நேற்றுதொடங்கியது. இந்த பிரச்சாரத்தைதெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தொடங்கிவைத்தார். பின்னர் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்த உறுதிமொழியை ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் ரயில்வே வளாகத்தில் பொதுமேலாளர் மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து நடைபெற்ற தூய்மைபணியில் அவரும் பங்கேற்றார். இதில், கூடுதல் பொதுமேலா ளர் கவுசல் கிஷோர், முதன்மை தலைமை இயந்திரவியல் பொறியாளர் சுரேஷ் மற்றும் உழியர்களும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தூய்மையை கடைபிடிப்பதில் நிலையான முன்னேற்றத்தை அடைவதற்கான முயற்சிகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது. ரயில்வே ஊழியர்கள், ரயில் பயனர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தூய்மையை வலியுறுத்தும் வகையில் செப்.17 முதல் அக்.2 வரை 15 நாட்களுக்கு சிறப்பு தூய்மை பிரச்சாரத்தை ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அக்.2-ம் தேதி வரை கடைபிடிக்கப்படவுள்ள இந்த தூய்மை வாரத்தில், தெற்கு ரயில்வேயில் 6 கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகளில் முழுமையான தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும். தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தூய்மை பணிகளும், ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.இவ்வாறு தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

x