செல்லூர் ராஜூ செம தாக்கு... தமிழ்நாட்டுல இருக்கிற ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்!


செல்லூர் ராஜு

அரசியலில் கத்துக்குட்டியான அண்ணாமலை தான் அரைவேக்காடு என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு என்றால் அது அண்ணாமலை தான். மத்தியில் ஆளும் கட்சியின் மாநில தலைவர் என்கிற மமதையில் அவர் பேசி வருகிறார். மறைந்த தலைவர்களை குறைவாக மதிப்பிட்டு அவர் பேசி வருவதை பார்த்தால், அவர்தான் அரைவேக்காடு என்பது தெரியும். அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி. ஆளுங்கட்சியில் பணத்தைக் காட்டி மிரட்டி கூட்டத்தை சேர்த்தால் மட்டும் போதுமா?” என்றார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மேலும், “தேர்தல் முடிஞ்ச பின்னாடி ஓட்டுப் பெட்டிகளை திறந்து வாக்குகளை எண்ணிய பிறகு தான் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் மக்கள் எவ்வளவு தூரம் ஆப்பு வெச்சிருக்காங்கன்னு தெரியவரும். தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலை இருப்பாரா அவர் அரசியலில் தொடர்வாரா என்பதெல்லாம் தெரிய வரும்.

ஒரு அரசியல் இயக்கம் என்பது அனைத்து தரப்பினரையும், அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து செல்வதாக இருக்க வேண்டும். ஆனால், பாஜக அப்படியல்ல. ஒரு மதத்தை மட்டும் முன்னிறுத்தி அரசியல் செய்து வருகிறார்கள் என்பது மக்களின் மனவேதனையாக உள்ளது.” என்றார் ராஜூ.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

தொடர்ந்து பேசிய அவர், “ பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி கூட்டத்தைக் கூட்டி அமர வைத்தனர். இந்தக் கூட்டம் தானா சேர்ந்த கூட்டமா? இல்லை. பணம் கொடுத்து சேர்த்த கூட்டம். இதற்கெல்லாம் தமிழ்நாட்டு வாக்காளர்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்.

எந்த ஆளுங்கட்சியுடன் சேர்ந்தால் பலன் இருக்கும் என்று சில கட்சிகள் சென்று வருகின்றன. அது குறித்து அதிமுக கவலை கொள்ளவில்லை. ஆனால், அண்ணாமலை தொடர்ந்து பல வருடமாக அரசியல் வாழ்க்கையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கெனவே அவர் பேசியதற்கு தேவையான அளவு திரும்பப் பெற்றுள்ளார். அப்படியும் திருந்தமாட்டேன்னா என்ன பண்றது?” என்றார்.

x