குட் நியூஸ்... அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000!


புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்யும் விதமாக மாதம் 1000 ரூபாய் வழங்கும் வகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்ற புதுமைப்பெண் திட்டம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 2.73 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது.

இதையடுத்து, புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்றும், இதற்காக ரூ.370 கோடி ஒதுக்கப்படும் என்றும், கடந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

புதுமைப்பெண் திட்டம் தொடக்க விழா

அதன்படி, அரசு பள்ளிகளை தொடர்ந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை வரும் கல்வியாண்டில் செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதன்மூலம் வரும் கல்வி ஆண்டில் 49,664 பேர் பயன்பெறுவர். இந்நிலையில், இந்த திட்டம் வரும் கல்வியாண்டு முதல், அரசுப் பள்ளிகளை தொடர்ந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு

இதுதொடர்பாக தமிழக அரசின் சமூகநலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அரசாணையில், “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் (புதுமைப் பெண் திட்டம்) வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்படும். அத்திட்டத்துக்கு ரூ.370 கோடி ஒதுக்கப்படும் என்று பட்ஜெட் உரையின்போது நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவித்தார். இதையடுத்து இத்திட்டம் தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x