அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைந்த போதும், அதன் பிறகு அந்தக் கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா மறைந்த போதும் இரட்டை இலை சின்னத்துக்கு சேதாரம் வந்தது. ஆனால், அப்படியான அசாதாரண சூழல் ஏதும் இல்லாத நிலையிலும் இப்போதும் அதிமுகவுக்கும், இரட்டை இலைக்கும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
1973-ல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவை எதிர்த்து மாயத்தேவரை நிறுத்தினார் எம்ஜிஆர். அப்போது அதிமுக அங்கீகரிக்கப்படாத கட்சி. அதனால், அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு வழங்கப்பட்ட சின்னங்களில் ஒன்றான இரட்டை இலையை மாயத்தேவர் தான் மதுரை ஆட்சியரிடம் டிக் பண்ணிக் கொடுத்தார். சொல்லப் போனால் இரட்டை இலை சின்னத்தை தேவர் தனக்காக தேர்ந்தெடுத்ததே பிற்பாடு தான் எம்ஜிஆருக்கே தெரியும்.
இருந்த போதும், அந்தத் தேர்தலில் இரட்டை இலை வென்று வரலாற்று சாதனை படைத்ததால் பிற்பாடு அதையே தனது கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக்கிக் கொண்டார் எம்ஜிஆர். இரட்டை இலைக்குப் பின்னால் இப்படியொரு சென்டிமென்ட் இருப்பதால் இலைக்கு சிக்கல் என்றாலே அதிமுகவினர் டென்ஷனாகிவிடுவார்கள்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜா அணி, ஜெ அணி இரண்டாகப் பிரிந்ததால் 1989 சட்டப் பேரவைத் தேர்தலில் இரட்டை இலை முடக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்த ஜானகி, பிற்பாடு அரசியலில் இருந்து விலகியதால் அதிமுக ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னமும் கைக்கு வந்தது. அதிலிருந்து 2016-ம் ஆண்டு வரை இலைக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஜெயலலிதா மறைந்த பிறகு மீண்டும் இரட்டை இலை சின்னத்துக்கு பிரச்சினை எழுந்தது. 2017-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக ரெண்டுபட்டது. அதனால் இருவருக்குமே இரட்டை இலையைக் கொடுக்காமல் முடக்கியது ஆணையம். இந்நிலையில், அதே ஆண்டில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கைகோத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதிமுகவையும் இரட்டை இலையையும் மீட்டனர்.
ஆனால், அதுவும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. அதிமுகவுக்குள் கிளம்பிய ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றிப்போய், 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி பொதுக்குழு வழியாக அதிமுக பொதுச் செயலாளரானார் இபிஎஸ். ஓபிஎஸ்சும் அவரது ஆதரவாளர்களும் கட்சியைவிட்டே நீக்கப்பட்டார்கள். இதையடுத்து பொதுக்குழு முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓபிஎஸ் தரப்பும், அதை எதிர்த்து இபிஎஸ் தரப்பும் வழக்குகளைத் தொடுத்தன. உயர் நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை இந்த வழக்குகள் இழுபட்டன.
இதற்கிடையில், 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு தெற்கு இடைத் தேர்தலில் இருதரப்பும் வேட்பாளர்களை நிறுத்தியதால் மீண்டும் இரட்டை இலை டேஞ்சர் ஸோனுக்குள் வந்தது. இந்நிலையில், பாஜக மத்தியஸ்தம் செய்து ஓபிஎஸ்ஸை போட்டியிலிருந்து விலகவைத்ததால் அந்தத் தேர்தலில் இலை தப்பியது. அப்போது இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை வாங்கிக் கொடுத்த பாஜக தான் இப்போது இலையை எப்படியாவது முடக்கி தலைதூக்கிவிட முடியுமா என்று பார்க்கிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை பாஜக பெரிதும் எதிர்பார்த்தது. இன்னமும் அந்தக் கட்சிக்காக காத்திருக்கிறது பாஜக. ஆனால், அதிமுக நிலை இறங்கி வருவதாகத் தெரியவில்லை. இதனால் தங்களிடம் இருக்கும் துருப்புச் சீட்டான ஓபிஎஸ்ஸை வைத்து ’சின்னத்திற்கு ஆபத்து ’ என்று அச்சுறுத்தலை கையில் எடுத்திருக்கிறது பாஜக.
வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை பாஜக தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. இந்தக் கூற்றை வைத்துத்தான் இரட்டை இலைக்கு பங்கம் வரலாம் என்ற பேச்சு பரவலாக எழுந்திருக்கிறது.
ஆனால், உச்ச நீதிமன்றம் வரைக்குமான சட்டப் பாதுகாப்பு தங்களுக்கு இருப்பதால் தேர்தல் ஆணையத்தால் சின்னத்தை அத்தனை எளிதில் முடக்க முடியாது என்று அதிமுக திடமாக நம்புகிறது. இருப்பினும், “நாங்கள் இரட்டை இலையில்தான் போட்டியிடுவோம்” என்று ஓபிஎஸ் அழுத்தமாக சொல்லி வருவதைப் பார்த்தால் சந்தேகம் வரத்தான் செய்கிறது.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இபிஎஸ் தரப்பை அனுமதிக்கக் கூடாது என திண்டுக்கல் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கிறது. அவரின் கோரிக்கைக்கு உரிய விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய தாக்கீதுக்கு, “கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் இத்தகையை கோரிக்கையை எழுப்ப முடியாது” என பதில் கொடுத்திருக்கிறார் இபிஎஸ்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்துள்ள 8 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி முகமே கண்டிருக்கிறது. இந்த சூழலில் இரட்டை இலையும் இல்லாமல் போனால் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும். ஆனால், அத்தகைய சிக்கலை உண்டாக்கினால் தான் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது பெரிய கட்சியாக முன்னேற முடியும் என கணக்குப் போடுகிறது காவிக் கட்சி.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை நீக்கியது குறித்த வழக்கு இன்னமும் சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆனால், ஏற்கெனவே இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி இபிஎஸ் தரப்பை அதிமுகவாக அங்கீகரித்துள்ளது.
இந்நிலையில், வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை கோர இருப்பதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். ஏற்கெனவே போடப்பட்ட உத்தரவைக் காட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளரின் பதவிக்காலம் இன்னும் இருக்கிறது என்ற உரிமையின் மூலம் எனக்கு இரட்டை இலையைக் கொடுங்கள் என ஓபிஎஸ் கேட்கலாம். அப்படிக் கேட்டால், “முடிவெடுக்க அவகாசம் இல்லை; தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லி இரட்டை இலையை தேர்தல் ஆணையம் மூட்டைக்கட்டக் கூடும்.
இது தொடர்பாக அதிமுக தரப்பிலிருந்து நம்மிடம் பேசியவர்கள், "இலையை முடக்கும் ரீதியில் பாஜக விடுக்கும் மறைமுக எச்சரிக்கையை சட்டரீதியாக சந்திப்ப்போம். கட்சி விதிமுறைகளின் படி முறைப்படி பொதுக்குழு கூடி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து கட்சி, சின்னம் ஆகியவற்றை எங்களிடம் வழங்கியுள்ளது. அதனால், சும்மா மிரட்டலாமே தவிர சின்னத்தை அவர்களால் சட்டத்தை மீறி முடக்கமுடியாது” என்றார்கள்.
தான் இழுத்த இழுவைக்கு வராத கட்சிகளை பாஜக என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம். இப்போது பாஜக இழுத்த இழுவைக்கு இபிஎஸ் போகவில்லை. ஓபிஎஸ்ஸோ அழையா விருந்தாளியாக கமலாலயத்தில் தவம் கிடைக்கிறார். இதை வைத்து பாஜக என்ன சித்துவிளையாட்டுக் காட்டப் போகிறது என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்!