வேதாரண்யம் அருகே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விசிகவினர் கைது


வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளி உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி (அடுத்தப்படம்) ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளி உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மலர் தூவி, மறைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்.

நாகை மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ரவி இன்று மதியம் சென்னையில் இருந்து புறப்பட்டு, திருச்சிக்கு மதியம் 2 மணி அளவில் வந்தடைந்தார். அங்கிருந்து காரில், சாலை மார்க்கமாக நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி அமைந்துள்ள இடத்துக்கு மாலை 5 மணி அளவில் சென்றடைந்த ஆளுநருக்கு, காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், உப்பு சத்தியாகிரகப் போராட்ட தியாகிகளை போற்றும் வகையில் அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபிக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மறைந்த தியாகிகளை போற்றும் வகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்குள்ள உப்பு சத்யா கிரக போராட்ட காட்சி விளக்க மையத்தையும் பார்வையிட்டார் .

தொடர்ந்து, வேளாங்கண்ணிக்கு சென்று தங்கினார். தொடர்ந்து நாளை காலை நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக 9 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, வேதாரண்யம் வருகை தந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு இருந்தனர்.

இதற்காக அக்கட்சியின் நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வராசு தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருவதற்கு முன்பாகவே அகஸ்தியம் பள்ளி நினைவு ஸ்தூபிக்கு செல்லும் சாலையில் கருப்பு கொடியுடன் திரண்டனர். சாலையின் குறுக்கே நின்று மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது, தமிழக பாடத்திட்டம் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகளுக்கு தொடர்ந்து ஆர்.என்.ரவி ஆதரவு தெரிவித்து வருவதாகவும், சனாதன கொள்கைகளை உயர்த்தி பிடிப்பதாகவும், நீட், ஆன்லைன் ரம்மி, தேசிய கல்வி கொள்கைகளை ஆதரித்து வருவதாகவும், தமிழக அரசின் கோப்புகளில் கையெழுத்திட மறுத்து, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீஸார், அவர்களை கைது செய்து, காவல்துறை வாகனத்தில் ஏற்றி கைது செய்து தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநர் வருகையை ஒட்டி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட போலீஸார், நாகை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x