“தலைமைக்கான தகுதியை சீமான் இழந்துவிட்டார்” - நாதக முன்னாள் நிர்வாகிகள் பகிரங்கம்


திருச்சியில் நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் திருச்சி மண்டலச் செயலாளர் இரா.பிரபு, திருச்சி மாவட்ட வழக்கறிஞர் பாசறை மைக்கல் ஆரோக்கியராஜ், கட்சியிலிருந்து விலகிய எம்.ஜாபர் சாதிக்  மற்றும் அக்கட்சியினர். படம்-ஆர்.வெங்கடேஷ்.

திருச்சி: "நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கும் தகுதியை இழந்துவிட்டார்” எனக் குற்றம்சாட்டியுள்ள அக்கட்சியின் இந்நாள், முன்னாள் நிர்வாகிகள், "கட்சியிலிருந்து நீக்கியவர்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு, சீமான் பொது மன்னிப்புக் கோர வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த ஓராண்டில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 10 பேர், 5 மண்டலச் செயலாளர்கள், 10 மாவட்டச் செயலாளர்கள், 40 தொகுதிச் செயலாளர்கள் உள்ளிட்டோரை நீக்கியும், பொறுப்பிலிருந்து விலக்கியும் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிகளவு நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, விலகிய முன்னாள் நிர்வாகிகள் உட்கட்சி முரண்பாடுகள் குறித்து திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, திருச்சி மண்டல செயலாளர் இரா.பிரபு தலைமையில், வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் மைக்கல் ஆரோக்கிய ராஜ், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ச.முருகேசன், முன்னாள் நிர்வாகிகள் எம்.ஜாபர் சாதிக், மதுரை வெற்றிக்குமரன், தனசேகரன், சர்வத்கான், ஏ.தேவராஜ் ஆகியோர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியது:

"நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்வாதிகார தன்மையோடு நடந்து கொள்கிறார். அவரது பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தம் இல்லை. தமிழ் தேசிய உணர்வாளர்களின் உழைப்பைச் சுரண்டி சொகுசு வாழ்கை வாழ்ந்து வருகிறார். தங்களது வியர்வையில், உழைப்பில் கட்சி தலைமை அலுவலகத்திற்காக கொடுத்த பணத்தை, வட்டிக்கு விட்டவர் சீமான். அந்த பணத்தை வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்தவர் தலைமறைவாக உள்ளார்.

கட்சிக்கு பொதுக்குழு, செயற்குழு, கட்சிக்கென சட்டத்திட்டம் என ஏதுவும் கிடையாது. எந்தப் பொறுப்பையும் யாருக்கும் கொடுத்து அவர்களை சுயமாக செயல்பட சீமான் அனுமதிப்பதில்லை. கட்சியில் தான் மட்டுமே ஒன் மேன் ஆர்மியாக, ஆல் இன் ஆல் ஆழகு ராஜாவாக செயல்பட சீமான் எத்தணிக்கிறார். அதனால் தான் கடந்த தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை இழந்தோம்.

கட்சியில் தன்னைத் தாண்டி யாரும் பிரபலமாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அப்படி யாராவது வளர்ந்து வந்தால் அவர்களை திட்டமிட்டு காலி செய்து விடுகிறார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அங்குள்ள தமிழர்களை பாதுகாக்க பணம் வசூல் செய்து கொடுத்தோம். அதேபோல அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் சேகரித்துக் கொடுத்தோம். அவை இதுவரை இலங்கை தமிழ் மக்களுக்கு சென்று சேரவில்லை.

தமிழ் தேசிய அரசியலை ஏற்றுக்கொண்ட தங்களால் இனியும் சீமானுக்கு அடிமையாக இருக்க முடியாது. உண்மையாகவும், நேர்மையாகாவும் செயல்பட்டால் சீமானுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். சீமான், இதுவரை கட்சியை விட்டு பலரை நீக்கியுள்ளார். நீக்கியதற்கான காரணத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அல்லது அவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் தவறு என்று அரசியல் மேடையில் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.

திராவிட அரசியலுக்கும், ஆரிய அரசியலுக்கும் மாற்றாக தமிழ் தேசிய அரசியலை தங்களுக்குள் விதைத்தவர் சீமான். படித்த தாங்கள் அக்கொள்கைகளை ஏற்று அவரது பின்னால் வந்தோம். ஆரம்பத்தில் அவரது பேச்சுக்கள் அவரை நேர்மையானவராக காட்டியது. ஆனால், காலம் கடந்து செல்லச் செல்ல அவரது உண்மை சுயரூபம் தெரிய வந்தது. கட்சி நிர்வாகிகளின் உழைப்பை உறிஞ்சி தின்று தன்னைத் தானே வளர்த்துக் கொண்டார். திராவிட அரசியல் கட்சியினர் செய்யும் தவறுகள் எல்லாம் இப்போது நாம் தமிழர் கட்சியிலும் இருக்கிறது.

ஊழல், பாலியல் குற்றச்சாட்டுகள், ஆபாச பேச்சுகள் இப்போது நாதகவிலும் உள்ளது. காமராஜரிடம், கக்கனிடம் இருந்த எளிமையான வாழ்க்கை சீமானிடம் இருக்கிறதா? கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதியை சீமான் இழந்துவிட்டார். தற்போது தமிழ் தேசிய அரசியலுக்கு மாற்று தலைமை தேவைப்படுகிறது. தன் மீது வைக்கப்படும் பாலியல், பலாத்கார குற்றச்சாட்டுகளுக்கு சீமான் பதிலளிக்க வேண்டும். தாங்கள் ஒழுக்கமான தலைவரை எதிர்பார்க்கிறோம்.

சீமானால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களில் யாராவது ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டை, ஊழல் குற்றச்சாட்டை சொல்ல முடியுமா? நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வியர்வையில் வசூலித்த செல்வத்தை, பொருளாதாரத்தை, விஜயலட்சுமி என்கின்ற பெண்மணிக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு, ஏழ்மையில் பிச்சை எடுத்து கட்சி நடத்துகிறோம் என்று சொன்ன சீமானுக்கு பணம் எங்கிருந்து வந்தது?

நா.த.க-வைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி என்கின்ற நிர்வாகி பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளானார். அவரை விசாரணைக்கு உட்படுத்தாமல், அவரது குற்றச் செயலை ஊக்கப்படுத்தும் வகையில் பொது மேடைகளில் (Don't worry be happy your elder brother I am advice you) பேசினார். பெண் சமத்துவத்தை பற்றி பேசிவிட்டு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது சரியா? கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈழத் தமிழர்களிடம் இருந்து வர வேண்டிய நிதி வராததால், ஈழத் தமிழர்களது உரிமைகள் பற்றி சீமான் பேசுவதில்லை.

அதேபோல கன்னியாகுமரியில் மலைப் பாறைகளை வெட்டி கேரளாவுக்கு கடத்திச் செல்லும் மணல் மாஃபியாக்களுக்கு எதிராக நாதகவினர் போராட்டம் நடத்தினார்கள். அந்த மணல் மாஃபியாக்களிடம் இருந்து சீமானுக்கு வர வேண்டியது வந்த உடன் அவர்களுக்கு எதிராக போராட கட்சியினரை அனுமதிக்காதவர் சீமான். கட்சியை ஒழுங்காக நிர்வகித்திருந்தால் தற்போது நாதகவுக்கு 10 எம்எல்ஏ-க்கள் இருந்திருப்பார்கள்.

கட்சியில் உள்ள உட்கட்சி பிரச்சினைகளை சீமான் விரைவில் சரி செய்ய வேண்டும். இல்லையெனில் கட்சியினர் மாற்று இயக்கங்களை தேடிச் செல்லவதை தவிர்க்க முடியாது. எங்களைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதேபோல கட்சியினர் தங்கள் கருத்துக்களை வெளி உலகுக்குத் தெரிவிப்பார்கள்" என்று அவர்கள் கூறினார்.

x