ஆடுகளிடம் மனு கொடுத்த பொதுமக்கள் | மின் கட்டண உயர்வை வாபஸ் பெற புதுவையில் நூதன போராட்டம்!


புதுச்சேரி: புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி ஆடுகளிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் இன்று நடந்தது.

புதுச்சேரி அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடிமை சமூகங்கள் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் பிரச்சார போராட்டம் நடந்து வருகிறது. புதுவை சட்டமன்றம் அருகே செம்மறி ஆடுகளுக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில், இன்று சட்டப்பேரவை அருகே ஜென்மராக்கினி கோயில் எதிரே ஆம்பூர் சாலையில் இந்த நுாதனப் போராட்டம் நடந்தது.

இந்த நூதனப் போராட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், தமிழர் களம் அழகர், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், இந்திய ஜனநாயக கழகம் வீரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளிடம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என மனு அளித்தனர்.

பலமுறை இது குறித்து கோரிக்கை அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் அரசு தரப்பில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறாததால் ஆடுகளிடம் மனு தரும் போராட்டம் நடத்தியதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

x