மிலாது நபி திருநாள் | உதகையில் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணி


உதகை: மிலாது நபியை முன்னிட்டு உதகையில் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி நபிகள் நாயத்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உதகையில் உள்ள பெரிய பள்ளி வாசலில் மிலாது விழா நடந்தது. இவ்விழாவிற்கு முகமதிய மிலாது கமிட்டி தலைவர் சையது முகமது ஷா, ஹாயத்துல் இஸ்லாம் மதரசா செயலாளர் உபைத் துல்லா, கமிட்டி துணை தலைவர் எஸ்.எம்.ரபீக் மற்றும் இமாம் சுல்தான் ஆலம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

முள்ளிக்கூர் கோபால் சாமிஜி, கிறித்தவ மதம் சார்பில் பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கலந்து கொண்டு மிலாது விழா மத நல்லிணக்க ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் பெரிய பள்ளி வாசலில் தொடங்கி, லோயர் பஜார், மார்க்கெட், மணிக்கூண்டு வழியாக சாந்தி விஜயா பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஊர்வலங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களும் நடந்தன. இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் மதரஸா மாணவ - மாணவியருக்கு குரான் ஓதும் போட்டிகளும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

x