குப்பைகளை அகற்ற கோடிக்கணக்கில் செலவு; குப்பைகளை வீதியில் கொட்டாதீர்கள்... முதல்வர் ரங்கசாமி ஆதங்கம்


புதுச்சேரி: குப்பைகளை அகற்ற கோடிக் கணக்கில் அரசு செலவு செய்வதால், மக்கள் பொறுப்புணர்வுடன் வீதியில் குப்பைகளை கொட்டாமல் பார்த்து கொள்வதுடன், குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் தர வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறை மற்றும் நகராட்சிகளின் சார்பில், ‘தூய்மையே சேவை இருவார நலப்பணி’ கடைப்பிடிக்கப் படுகிறது. இதனை முன்னிட்டு இன்று தொடங்கி இரு வார காலத்துக்கு நகரம் முழுவதும் பல்வேறு தூய்மைப் பணிகள் மற்றும் தூய்மை சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. இதன் தொடக்க விழா புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இன்று காலை நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி நிகழ்வை தொடக்கி வைத்து, தூய்மையே சேவை உறுதிமொழியினை முன்மொழிய அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய ஒரு மணி நேர தூய்மைப் பணியினை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.‌ பின்னர், "தூய்மையே சேவை இருவார நலப்பணி’யையொட்டி பொதுமக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “சிறிய மாநிலமான புதுவையை அழகாக வைத்துக்கொள்வது நம் அனைவருடைய கடமை ஆகும். உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் புதுவைக்கு வருகின்றனர்.

ஆன்மிக பூமியான புதுவையை அழகாக வைத்துக் கொள்வது நமது கடமை. குப்பைகளை அகற்ற கோடிக் கணக்கில் அரசு செலவு செய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் வீதியில் குப்பைகளை கொட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பைகளை தரம் பிரித்துத் தர வேண்டும். தூய்மையான பாரதம் என்பது மகாத்மா காந்தியின் கனவு. அதை நனவாக்க வேண்டியது நம் அனைவருடைய கடமை” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.

தொடர்ந்து கடற்கரை சாலையில் குப்பைகளை அகற்றும் பணியில் பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், அதிகாரிகள், பள்ளி - கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டனர்.

x